இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு, பாரதீய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் எம்.ஜே. அக்பர் பிறந்த நாள் வாழ்த்து!

 

எம்.ஜே.அக்பர்

எம்.ஜே.அக்பர்

பாரதீய ஜனதாக் கட்சியின் சார்பில் அக்கட்சியின்  செய்தி தொடர்பாளர்  எம்.ஜே. அக்பர், இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களுக்கு சுபீட்சமான வாழ்க்கைத் தரத்தை அமைத்துக் கொடுக்கும் வகையில், தங்களுக்கு நீண்ட ஆயுள், தேக ஆரோக்கியம் கிடைக்க வாழ்த்துத் தெரிவிப்பதாகவும், மேலும், இந்திய-இலங்கை உறவுகள் மென்மேலும் வலுப்பட வேண்டும் என்றும், அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யார் இந்த எம்.ஜே.அக்பர்?

மூத்த பத்திரிகையாளரான எம்.ஜே.அக்பர், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் செய்தித் தொடர்பாளராக இருந்தவர். காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாக இருந்த எம்.ஜே.அக்பர், கடந்த 1991ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிகார் மாநிலம் கிஷண்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்டார்.

அதன் பிறகு கடந்த மார்ச் மாதம் 22 – ந்தேதி பா.ஜ.க தலைவர் ராஜ்நாத் சிங்கை தில்லியில் சந்தித்து அக்கட்சியில் இணைந்தார்.

M.J.AKBAR

இந்நிலையில் இம்மாதம் (நவம்பர்) 7- ந்தேதி  சிறிலங்காவில் பயணம் மேற்கொண்ட எம்.ஜே.அக்பர், கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில், இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவுரையை நிகழ்த்தினார்.

m.j.akbar-colombo-speech

அப்போது, இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் சிறந்த உறவு முக்கியம். இலங்கையில் கடந்த ஆண்டு நடைபெற்ற கொமன்வெல்த் மாநாட்டுக்கு முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் வருகை தராமை தவறாகும்.

ஆனால், தற்போதைய இந்தியப் பிரதமர் தனது பதவியேற்புக்கு சிறிலங்கா அதிபரை அழைத்தார். இந்த விசயத்தில் மாநிலத்தின் உணர்வு குறித்து மத்திய அரசாங்கம் கவலை கொள்ளவில்லை. மாற்றத்தை புரிந்து கொள்ளுங்கள்  என்று தெரிவித்தார்.

இந்த எம்.ஜே.அக்பர் தான், பாரதீய ஜனதாக் கட்சியின் சார்பில், இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு, தற்போது பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in