வேலை தேடி போகிற நீங்கள் பலருக்கு வேலை தரும் நிலையில் உயர வேண்டும்: கல்லூரி விழாவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஆணையர் சத்யபிரத சாகு பேச்சு!

IMAGE 01திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த செ.நாச்சிப்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 3-வது ஆண்டாக மாணவர்களுக்கு பட்டயம் அளிப்பு மற்றும் வாரிய தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த விழாவில் சிவில் இன்ஜினியரிங் 39, மெக்கானிக்கல் 92, எலக்டிரிக்கல் 50, எலக்ட்ரானிக்ஸ் கம்மியூனிகேஷன் 26, டைமேக்கிங் 44 என 251 மாணவ, மாணவிகளுக்கு பட்டயம் மற்றும் 21 மாணவர்களுக்கு தலா 10 ஆயிரம், 24 மாணவர்களுக்கு தலா 5 ஆயிரம், 66 மாணவர்களுக்கு தலா ரூபாய் 2 ஆயிரத்து 500, 38 மாணவர்களுக்கு தலா 1000 என 149 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.5 லட்சத்து, 33 ஆயிரம் ரொக்க பரிசுகளும் வழங்கப்பட்டது.

விழாவுக்கு கல்லூரி தலைவர் அக்ரி வெங்கடாஜலபதி தலைமை தாங்கி பேசினார். அப்போது இக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு வாரிய தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூபாய் 15 இலட்சத்து 83 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளில் ரூ.4 இலட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. 100 சதவீத வேலைவாய்ப்பாக இதுவரை 1026 மாணவர்களுக்கு பணிநியமனம் ஆணை பெற்று தரப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 396 மாணவர்களுக்கு பணிநியமனம் பெற்றுதரப்பட உள்ளது. பாடத்திட்டம் மட்டுமல்லாமல் சர்டிபிகேட் கோர்ஸ் சிஸ்டம் அடிப்படையில் சிறப்பு பாடங்கள் உரிய உபகரணங்களுடன் நடத்தப்படுகிறது. 5 ஆண்டுகளில் இக்கல்லூரி மாணவர்கள் 1000 யூனிட் ரத்ததானம் செய்துள்ளனர் என தெரிவித்தார்.

விழாவுக்கு நிர்வாக குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், பொருளாளர் புனிதவதி முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் பிரமிளாஜெயந்தி வரவேற்று பேசினார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஆணையர் சத்தியபிரத சாகு கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டயம் மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கி பேசினார்.

அப்போது திருவண்ணாமலை மாவட்டம் பின்தங்கிய மாவட்டம், அதிலும் செங்கம் தொகுதி பின்தங்கிய பகுதி இதற்காக காரணத்தை நான்கு ஆண்டுகள் இந்த மாவட்ட கலெக்டராக இருந்தபோது நான் யோசித்தது உண்டு. கல்வி வளர்ச்சி இல்லாதது இதற்கு காரணம் கிராம புறத்தில் உள்ள இந்த கல்லூரியில் 100 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து மாணவர்கள் வந்து படிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இக்கல்லூரியில் பி.இ. மற்றும் எம்.இ. படிப்பு படித்தவர்களே பேராசிரியர்களாக இருப்பது சிறப்பானதாகும்.

குறைந்த விலையில் லேப்டாப் வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் புதுமையாக சிந்தித்த இளைஞர் உருவாக்கிய டெல் நிறுவனம் இன்று 80 நாடுகளில் சிறந்து விளங்குகிறது.

எனவே பட்டம் பெறுகிற நீங்கள் உங்கள் வேலைகளுக்காக நேரம் தொடங்குகிறது என்பதை உணருங்கள். உங்கள் சொந்த கையில்இ சொந்த மூளையில் ஒழுக்கத்தோடு முன்போக்கு சிந்தனைகளோடு வாய்ப்புகள் வரும் போது அதை பயன்படுத்தி முன்னேற முயற்சி செய்யவேண்டும்.

இன்று உலகம் திரும்பி பார்க்கும் இரண்டு நாடுகள் சீனா மற்றும் இந்தியா இங்குதான் மனித ஆற்றல் அதிகம் இதை பயன்படுத்தி முன்னேற வேண்டும். வேலை தேடி போகிற நீங்கள் பலருக்கு வேலை தரும் நிலையில் உயர வேண்டும். அதை பார்த்து பெற்றோர்கள் பெருமைபட வேண்டும். சுய திருப்தி தேவை உங்களை வளர்த்துக் கொண்டு சமூதாயத்திற்கும், தேசத்திற்கும் பயன்பட வேண்டும். அதற்கு இந்த கல்லூரி உரிய வழியை காட்டியிருக்கிறது. இவ்வாறு போக்குவரத்து ஆணையர் சத்தியபிரத சாகு பேசினார்.

விழாவினை வாழ்த்தி திருவண்ணாமலை மாவட்ட தமிழ்ச்சங்க தலைவர் என்னோரா இந்திரராஜன், ஆன்மீக சொற்பொழிவாளர் தனஞ்செயன் பேசினர். முடிவில் பேராசிரியர் ரூபி நன்றி கூறினார். விழாவில் வட்டார போக்குவரத்து அலுவலர் சாமிநாதன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் லட்சுமி நரசிம்மன், ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி தலைவர் பாண்டுரங்கன், பேரூராட்சி துணைத்தலைவர் பார்த்தசாரதி, மேல்பள்ளிப்பட்டு கூட்டுறவு சங்க தலைவர் சங்கர், ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி சி.மாணிக்கம் மற்றும் சதீஷ்குமார், சீனுவாசன், ரேவதி, குரு, விமல்ராஜ், சுரேஷ் உள்ளிட்ட பேராசிரியர்கள் பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

-செங்கம் மா.சரவணக்குமார்.