பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி தாக்குதல்! நரேந்திரமோதி மௌனம் காப்பது ஏன்? ராகுல் காந்தி கேள்வி

rahul-gandhiஎல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலை நரேந்திரமோதி ஏன் தடுக்கவில்லை என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

மகாராஷ்ட்ரா மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் வரும் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இன்று (08.10.2014) காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி அங்கு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ”நாடாளுமன்ற தேர்தலின்போது இந்திய எல்லைக்குள் ஊடுருவும் சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என நரேந்திரமோதி கூறினார்.

ஆனால், இப்போதும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து பலமுறை தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால், பிரதமர் நரேந்திரமோதி கடந்த மூன்று மாதங்களாக எதுவும் செய்யாமல், மௌனம் காப்பது ஏன்?

சீன அதிபருடன், பிரதமர் நரேந்திரமோதி ஊஞ்சல் ஆடியபோதுதான், 1000 சீன ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவினார்கள்.

நரேந்திரமோதி அமெரிக்க பயணம் மேற்கொண்டு, அங்குள்ள நிறுவனங்கள் தயாரிக்கும் நீரிழிவு, புற்றுநோய் மருந்துகளை இந்தியாவில் எப்படி விற்பனை செய்யலாம் என நினைக்கிறார். இதன் மூலம், 8 ஆயிரம் விலை கொண்ட மருந்து பொருட்கள், 1 லட்சத்திற்கு கிடைக்கிறது.

காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என பா.ஜ.க. கூறி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் கொள்கையை அவர்கள் உணரவில்லை. காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவது என்பது சாத்தியமற்றது” என்றார்.

-கே.பி.சுகுமார்.