ஆர்.எஸ்.எஸ். தலைவரின் பேச்சு, அரசு தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு! நியாயப்படுத்தும் நரேந்திர மோதி!

mohanbhagwatஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் விஜயதசமி பேச்சு, தூர்தர்ஷனில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாரதிய ஜனதாவின் தாய் அமைப்பு என்று கூறப்படும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத்தின் பேச்சு, அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளது.

விஜயதசமியையொட்டி நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், மோதி அரசு சரியான பாதையில் செல்வதாக பாராட்டினார். பகவத்தின் இந்த பேச்சு, அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரஷீத் ஆல்வி கூறுகையில், “தூர்தர்ஷன் மக்கள் பணத்தில் இருந்து இயக்கப்படுகிறது. அப்படி இருக்கையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சை ஒளிபரப்பு செய்ய அரசு அதனை எப்படி பயன்படுத்த முடியும்? இது மிகவும் துரதிஷ்டவசமானது என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சந்தீப் திட்சீத் தெரிவிக்கையில், இது ஆபத்தான பாரம்பரியம். இது நடுநிலை கொண்ட ஒரு அமைப்பு இல்லை. இது மிகவும் சர்ச்சைக்குரிய அமைப்பு. இது அரசின் அரசியல் முடிவு என்று தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறுகையில், ஆர்.எஸ்.எஸ். இத்துத்துவா கருத்துக்களை பிரச்சாரம் செய்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளின் தலைவர்களின் பேச்சுக்களை நேரடியாக ஒளிபரப்பு செய்வது தேசிய தொலைக்காட்சியின் பணி இல்லை என்று கூறியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைவர் டி.ராஜா தெரிவிக்கையில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சை ஒளிபரப்பு செய்ய தூர்தர்ஷனுக்கு அனுமதி அளித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் பதில் அளிக்க வேண்டும். அரசின் இந்த நடவடிக்கை நாட்டின் மதசார்பின்மை, ஜனநாயகத்திற்கு அமைதியின்மை மற்றும் கவலை தரும் நிலையை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

narendra modi twitter

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் பேச்சை, பிரதமர் நரேந்திர மோதி நியாயப்படுத்தி தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஆர்.அருண்கேசவன்.