நீப்பத்துறை சென்னம்மாள் கோவில் ஆடிபெருக்கு விழா தொடக்கம்!

image 01திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியம், நீப்பத்துறை அருள்மிகு சென்னம்மாள் கோவில் ஆடிபெருக்கு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. செங்கம் தாலுக்கா, நீப்பத்துறை கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் ஸ்ரீஅலமேலுமங்கை, பத்மாவதி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கட்டரமண பெருமாள் கோவில் உள்ளது.

இக்கோவிலின் வரலாறு சார்ந்த பெருமாளின் தங்கையாக ஆற்றின் நடுவில் சென்னம்மாள் பாறையும் காவல் தெய்வமாக ஆறுடையான் கோவிலிலும் உள்ளது. இந்த ஆடிபெருக்கு விழாவில் திருவண்ணாமலை, தருமபுரி, சேலம் மாவட்டங்களிலிருந்தும், சென்னை, பெங்களுர் போன்ற பெருநகரங்களிலிருந்தும் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இக்கோவிலில் 69 –வது ஆண்டு ஆடிபெருக்கு பெருவிழா கொடியேற்றத்தடன் தொடங்கியது. அர்ச்சகர்கள் வேத மந்திரம் ஓதி கொடி ஏற்றத்தை நடத்தினர். முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், ஆராதனையும் நடைபெற்றது. உற்சவர் அலங்கரிக்கப்பட்டு மேளதாளம் முழங்க வான வேடிக்கையுடன் சூரிய பிறையில் திருவீதி உலா நடந்தது.

விழாவில் பல்வேறு உபயதார்களுடன் பரம்பரை அறங்காவலர்களும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான செல்வரங்கன், கோகுலவாணன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆடி பெருக்கிற்கு வரும் பக்தர்கள் பொங்கலிட்டு குழந்தைகளுக்கு மொட்டை அடித்து, காதணிவிழா நடத்தியும், புதுமண தம்பதியினர் குழந்தை வரம் வேண்டி பிரார்த்தித்து, புதுமண தம்பதியினர் புது தாலி கயிறு மாற்றுதல், சென்னம்மாள் பாறையில் மஞ்சள், சிவப்பு, பொறி கடலை, கருமணி வலையல் போன்றவை வைத்து பச்சை போடுதல் போன்ற பல்வேறு பிராத்தனைகள் செய்து வழிபடுவர்.

ஆடிபெருக்கு விழாவுக்கு தென்பண்ணை ஆற்றில் தண்ணீர் இல்லாததால் அருகில் உள்ள கிருஷ்ணகிரி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடவேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.

தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும் என எதிர்பார்க்கிறோம். பக்தர்களின் வசதிக்காக பெரிய டேங்கர் லாரிகள் மற்றும் டிராக்டர்களில் பல இடங்களிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து சப்ளை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை, போளுர், ஊத்தங்கரை, செங்கம், சிங்காரப்பேட்டை, அருர் நகரங்களிலிருந்து அரசு மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பத்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என பரம்பரை அரங்காவலர்களும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான செல்வரங்கன், கோகுலவாணன் தெரிவித்தனர்.

செங்கம் மா.சரவணகுமார்.