முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில், முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் கபட நாடகம்!

KARUNANIDHI_முன்னாள் தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு. கருணாநிதி 27-06-2014 அன்று இதுதான் ஜெயலலிதா நதி நீர் இணைப்பு பிரச்சினையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்வதன் இலட்சணமா? என்று ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதை டீ கடை பத்திரிகை ‘தினத்தந்தி’ உட்பட பல ஊடகங்கள் ஒரு எழுத்தைக் கூட விடாமல் அப்படியே பிரசுரம் செய்து இருந்தனர்.

அந்த அறிக்கையை அப்படியே நமது வாசகர்களின் பார்வைக்கு இங்கு பதிவு செய்துள்ளோம். ’’கேரள சட்டசபையில் சில நாட்களுக்கு முன்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஜெமிலா பிரகாசம் என்பவர் கூறுகையில், “சமீபத்தில் டெல்லியில் நடை பெற்ற தேசிய அணைகள் பாதுகாப்புக் கமிட்டி கூட்டத்தில், முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், திருணக் கடவு மற்றும் பெருவாரிப்பள்ளம் ஆகிய நான்கு அணைகளும் தமிழ்நாட்டுக்குச் சொந்தம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், கூட்டத்தில் கலந்து கொண்ட கேரள அதிகாரிகள் அதை எதிர்க்கவில்லையே?” என்று கேட்டிருக்கிறார்.

இதற்கு விளக்கமளித்த முதலமைச்சர் உம்மன்சாண்டி “முல்லைப்பெரியாறு உட்பட நான்கு அணைகளும் இப்போது கேரளாவின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. அந்த அணைகள் முழுக்க முழுக்க கேரளாவுக்குச் சொந்தமானவை. 2009ஆம் ஆண்டு வரை இந்தியாவில் உள்ள பெரிய அணைகளின் பட்டியலில் இந்த நான்கு அணைகளும் தமிழ்நாட்டுக்குச் சொந்தமானவை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் கேரளா அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து 2012ஆம் ஆண்டு அந்த நான்கு அணைகளும் கேரளாவுக்குச் சொந்தம் என்று மாற்றப் பட்டது” என்று தெரிவித்திருக்கிறார்.

மத்திய நீர்வள ஆணையத்தின் கூட்டம் 2013 டிசம்பர் 27ஆம் தேதி நடந்தது. அந்தக் கூட்டத்துக்குப் பிறகு ஜுன் 2014 வரை உள்ள விபரங்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெரிய அணைகள் பற்றிய தேசியப் பதிவேடு வெளியிடப்பட்டது. அந்தப் பதிவேட்டில் முல்லைப் பெரியாறு, திருணக்கடவு, பெருவாளிப்பள்ளம், பரம்பிகுளம் ஆகிய நான்கு அணைகளும் கேரள அணைகள் பட்டியலில் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளன என்றும்; தமிழக அணைகளின் பட்டியலில் இவை சேர்க்கப்பட வில்லை என்றும் செய்தி வெளிவந்துள்ளது.

கடந்த 2009 வரை இந்த நான்கு அணைகளும் தமிழகத்தின் பட்டியலில் இருந்தன. கேரளாவின் வலியுறுத்தலைத் தொடர்ந்தே இந்த நான்கு அணைகளும் கேரள பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மாற்றம் 2012ஆம் ஆண்டு நடைபெற்றதாக கேரள முதலமைச்சர் கூறியிருக்கிறார்.

23-6-2014 அன்று தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட ஓர் அறிக்கையில், “காவேரி நதி நீர்ப் பிரச்சினையிலும், முல்லைப் பெரியாறு நதி நீர்ப் பிரச்சினையிலும் எப்படி தமிழ் நாட்டின் உரிமை என்னால் நிலைநாட்டப்பட்டதோ, அதேபோன்று பாலாறு நதி நீர்ப் பிரச்சினையிலும் தமிழ்நாட்டின் உரிமை நிலை நாட்டப்படும்” என்று தன்னைத் தானே புகழ்ந்து கொண்டாரே, கேரள முதல் அமைச்சர் நான்கு அணைகளும் 2012ஆம் ஆண்டு கேரளப் பட்டியலிலே மாற்றப் பட்டன என்று சொல்லியிருக்கிறாரே, இந்த உரிமை யாரால் நிலை நாட்டப்பட்டது?

காவேரி நதி நீர்ப் பிரச்சினையிலும், முல்லைப் பெரியாறு நதி நீர்ப் பிரச்சினையிலும் தன்னால் தமிழ்நாட்டின் உரிமை நிலைநாட்டப்பட்டது என்று சொல்லியிருக்கிறாரே, காவேரி நதி நீர்ப் பிரச்சினை தீர்ந்து விட்டதா? மேலாண்மை வாரியம் உருவாக்கப்பட்டு விட்டதா?

முல்லைப் பெரியாறு நதி நீர்ப் பிரச்சினையில் தமிழ் நாட்டின் உரிமை முழுமையாக நிலைநாட்டப்பட்டு விட்டதா? கேரள சட்டசபையில் அந்த மாநில நீர்வளத் துறை அமைச்சர், பி.ஜே. ஜோசப் கூறும்போது, “தேசிய நீர்வள மேம்பாட்டு முகமை, கேரளத்தின் பம்பை, அச்சன்கோவில் ஆறுகளை தமிழகத்தின் வைப்பாறுடன் இணைக்க யோசனை தெரிவித்துள்ளது; பம்பை, அச்சன் கோவில் ஆறுகளின் நீர், விவசாய மற்றும் பாசன பயன்பாட்டிற்கே சரியாக உள்ளது; தேவைக்கு அதிகமாக நீர் இருப்பதில்லை; இது தொடர்பாக வல்லுநர் குழு ஒன்று ஏற்கனவே அறிக்கை சமர்ப்பித்துள்ளது; எனவே நதிகள் இணைப்புத் திட்டம் சாத்தியமில்லை” என்று தெரிவித்திருக்கிறாரே, இதற்கு தமிழக அரசின் பதில் என்ன? இது தான் ஜெயலலிதா; நதி நீர் இணைப்புப் பிரச்சினையில் ஆக்கப் பூர்வமான நடவடிக்கை மேற்கொள்வதன் இலட்சணமா?’’என்று மு.கருணாநிதி கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த அறிக்கை வெளிவந்த 24 மணி நேரத்திற்குள் ஆதாரப்பூர்வமாகவும், அதே சமயம் ஆக்ரோஷசமாகவும் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா 28.06.2014 அன்று ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

அந்த அறிக்கையையும் அப்படியே நமது வாசகர்களின் பார்வைக்கு இங்கு பதிவு செய்துள்ளோம்.

pr28062014_1241 copy pr28062014_1242 copy pr28062014_1243 copy pr28062014_1244 copyஅதற்கு பிறகும் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி ஓய்ந்தபாடில்லை. மறுபடியும் இன்று (29.06.2014) அரைவேக்காடு யார்? ஜெயலலிதாவா, நானா? என்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையையும் அப்படியே நமது வாசகர்களின் பார்வைக்கு இங்கு பதிவு செய்துள்ளோம்.

27-6-2014 அன்று நான் வெளியிட்ட அறிக்கையில், கேரள மாநில சட்டப் பேரவையில் நடைபெற்ற நிகழ்ச்சியைச் சுட்டிக்காட்டி, முதலமைச்சர் உம்மன் சாண்டி, “முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், திருணக்கடவு மற்றும் பெருவாரிப் பள்ளம் ஆகிய நான்கு அணைகளும் இப்போது கேரளாவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. அந்த அணைகள் முழுக்க முழுக்க கேரளாவுக்குச் சொந்தமானவை. 2009ஆம் ஆண்டு வரை இந்தியாவில் உள்ள பெரிய அணைகளின் பட்டியலில் இந்த நான்கு அணைகளும் தமிழ்நாட்டிற்குச் சொந்தமானவை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் கேரளா அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து 2012ஆம் ஆண்டு அந்த நான்கு அணைகளும் கேரளாவுக்குச் சொந்தம் என்று மாற்றப்பட்டது” என்று பேரவையிலேயே அறிவித்ததையும் குறிப்பிட்டு “நதிநீர் சம்பந்தமாகத் தமிழ்நாட்டின் உரிமைகளை நான்தான் நிலைநாட்டி வருகிறேன்” என்று சொல்லி வரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, இந்த நான்கு அணைகளும் கேரளத்திற்குச் சொந்தம் என்று உம்மன் சாண்டி உரிமை கொண்டாடுகிறாரே, அந்த உரிமை யாரால் நிலைநாட்டப்பட்டது?’’ என்று கேள்வி எழுப்பியிருந்தேன். 

இந்தக் கேள்விக்கு ஜெயலலிதா என்ன பதில் சொல்லியிருக்க வேண்டும்? கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி அறிவித் திருப்பது முற்றிலும் தவறானது என்று சொல்லி அவரது அறிவிப்பினைக் கண்டித்திருக்க வேண்டும் அல்லது கேரள முதலமைச்சர் செய்திருக்கும் அறிவிப்பினைப் பற்றி தமிழக அரசு மேற்கொண்ட அல்லது மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளைப் பற்றி விளக்கி இருக்க வேண்டும்.

இப்படி ஆக்கப்பூர்வமான பதிலை அளிக்காமல், முக்கியமான இந்தப் பிரச்சினையில் தமிழக மக்களுக்கு விளக்கம் அளித்திட வேண்டிய முதலமைச்சர் ஜெயலலிதா, பிரச்சினையை நாட்டு மக்களுடைய கவனத்திற்குக் கொண்டு வந்ததற்காக என்மீது எரிச்சலையும் கோபத்தையும் கொட்டியிருக்கிறார். “ஈரைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்கும்” முயற்சியில் நான் ஈடுபட்டிருப்பதாகவும், “ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு” என்றும், “அரை வேக்காட்டு அறிக்கை” என்றும் அவருக்கே உரிய அரசியல் பண்பாட்டையொட்டி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். 

என்னுடைய அறிக்கையை அச்சத்தின் காரணமாக வெளியிடாத தமிழ்நாட்டின் சில பத்திரிகைகள், ஜெயலலிதாவின் பதில் அறிக்கையை மட்டும் அவரைக் குளிர்விப்பதற்காகப் பெரிதாக வெளியிட்டிருக்கின்றன. பத்திரிகா தர்மம் தமிழகத்தில் கொடிக்கட்டிப் பறப்பதை பாரினில் அனைவரும் பார்த்து ரசிக்கிறார்கள்!

2009 ஆம் ஆண்டின் பெரிய அணைகள் குறித்த தேசியப் பதிவேட்டில் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை குறித்த விவரங்கள் குறிப்பிடப்பட வில்லை என்றும், 2012ஆம் ஆண்டின் பதிவேட்டில் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை குறித்த விவரங்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டன என்றும், எனினும் பின் குறிப்பில் இந்த நான்கு அணைகளும் தமிழ்நாட்டால் இயக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன என்றும் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஜெயலலிதா தன்னுடைய அறிக்கையிலே குறிப்பிட்டுள்ளார். 

2012 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதாதானே பொறுப்பு வகித்தார்? தேசியப் பதிவேட்டில் இந்த நான்கு அணைகளும் 2012 ஆம் ஆண்டு கேரள மாநில அணைகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதை எதிர்த்து ஜெயலலிதா குரல் கொடுத்திருக்க வேண்டாமா? இதுகுறித்து மத்திய அரசுக்கு தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்திருக்க வேண்டாமா?

 ஆட்சியில் இருப்பவர்களுக்குத் தானே தேசியப் பதிவேட்டின் விவரங்கள் அனைத்தும் தெரியும். ஆனால், எதிர்க்கட்சியில் இருக்கும் என்னைப் பார்த்து 2012 ஆம் ஆண்டில் ஏன் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்று கேட்டால் அப்படிக் கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது என்பதை நடுநிலையாளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

அ.தி.மு.க. அரசின் வற்புறுத்தலின் பேரில், 2013 ஆம் ஆண்டு தேசியப் பதிவேட்டில் “இந்த நான்கு அணைகளும் தமிழ்நாடு பொதுப்பணித் துறையினரால் இயக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன” என்று பின்குறிப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஜெயலலிதா தன்னுடைய அறிக்கையிலே தெரிவித்திருக்கிறார். ஆனால் 2009 ஆம் ஆண்டும், 2012  ஆம் ஆண்டும், 2013 ஆம் ஆண்டு பின்குறிப்பில் குறிப்பிட்டிருந்ததைப் போலவே, “நான்கு அணைகளும் தமிழ்நாட்டால் இயக்கப்பட்டு, பராமரிக்கப்படுகின்றன” என்று குறிப்பிடப்பட்டிருந்தாக ஜெயலலிதாவே தன்னுடைய அறிக்கையிலே சொல்லியிருக்கிறார். 

உண்மை நிலை இப்படியென்றால், 2013 ஆம் ஆண்டு பின் குறிப்பில் தெளிவாக்கப்பட்டது அ.தி.மு.க. அரசின் வற்புறுத்தலினால்தான் என்று ஜெயலலிதா உரிமை கொண்டாடிப் பெருமைப்பட்டுக் கொள்வதில் எந்தவிதப் பொருளும் இல்லை என்பதை அவருடைய அறிக்கையே காட்டிக் கொடுத்து விட்டது. 

“பெரியாறு அணை தமிழ்நாட்டிற்குச் சொந்தம்” என்று சொன்ன உச்ச நீதிமன்றத்தையே அவமதிக்கும் செயல் என்றெல்லாம் ஜெயலலிதா குறிப்பிட்டிருப்பது, கேரள முதல்வர் உம்மன் சாண்டி அவர்களின் அறிவிப்புக்குத் தான் பொருந்துமே தவிர, அதை எடுத்துச் சொன்ன எனக்கு எப்படிப் பொருந்தும்?

சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து பெங்களூரு தனி நீதிமன்றத்தையே சதா சர்வகாலமும் நினைத்துக் கொண்டிருக்கும் ஜெயலலிதா, நீதிமன்ற அவமதிப்பு என்று எனக்குப் “பூச்சாண்டி” காட்டுவது வேடிக்கையாக இருக்கிறது.

கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி சட்டப்பேரவையிலே அறிவித்ததைத் தமிழக மக்களின் கவனத்திற்குக் கொண்டு வந்ததற்காக என்மீது பாய்ந்து பிறாண்டி இருக்கும் ஜெயலலிதா, தன்னுடைய அநாகரீகமான அணுகுமுறையைத் திருத்திக் கொண்டு, இனியாவது முறையான முயற்சிகளின் மூலம் தேசியப் பதிவேட்டில் இந்த நான்கு அணைகளும் தமிழகத்திற்குச் சொந்தமானவையே என்பதை உறுதி செய்ய வேண்டும். “பட்டுக் கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப்பாக்கு பணத்துக்குப் பத்து என்றானாம்” என்ற பழமொழியின் பாணியில், ஜெயலலிதா மாநில நிர்வாகத்தை நடத்த நினைப்பது, தமிழக மக்களுக்கு எந்த வகையிலும் நன்மையைத் தராது.

கேரளத்தின் பம்பை, அச்சன்கோவில் ஆறுகளை தமிழகத்தின் வைப்பாறுடன் இணைப்பது பற்றி கேரள சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தை என்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன். 2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நதிநீர் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பை தனது பதில் அறிக்கையிலே ஜெயலலிதா குறிப்பிட்டிருக்கிறார். உச்சநீதி மன்றத்தின் அந்தத் தீர்ப்பே கழக வழக்கறிஞர் திரு.கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 1983 இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து மேல்முறையீட்டினை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததன் விளைவாகத்தான் வந்தது என்பதை ஜெயலலிதா தன்னுடைய அறிக்கையிலே மறைத்து விட்டாலும், நதிநீர் இணைப்பு குறித்து அறிந்தவர்கள் மறந்துவிட மாட்டார்கள்.

என்னுடைய அறிக்கைக்கு நேரடியாகப் பதில் சொல்ல இயலாத நிலையில், சுற்றி வளைத்து எதையாவது சொல்ல வேண்டுமே என்பதற்காக, “நதிநீர் இணைப்பு பற்றி பிரதமரிடம் நேரில் வலியுறுத்தி உள்ளேன்” என்று ஜெயலலிதா தன்னுடைய அறிக்கையிலே பொத்தாம் பொதுவாகச் சொல்லியிருக்கிறார். ஏதோ நதிநீர் இணைப்பு குறித்து இவர்தான் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டு முதன்முதலில் நடவடிக்கை எடுத்த வரைப் போல ஜெயலலிதா தன்னுடைய அறிக்கையிலே பெரிதுபடுத்திச் சொல்லியிருக்கிறார். ஆனால் உண்மை நிலை என்ன?

தி.மு.கழக ஆட்சியின்போது 2007- 2008 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையிலேயே, “இந்தி யாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் ஒற்றுமைக்கும் ஒருமைப் பாட்டிற்கும், இறை யாண்மைக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் நதிநீர்ப் பங்கீடு பிரச்சினைகள் உருவாவதைத் தடுத்திட முதலில் தீபகற்ப நதிகளையாவது இணைத்திட வேண்டும் என்ற கோரிக்கையை அவசர அவசியம் கருதி, உடனடியாக நிறை வேற்றும் பணி மத்திய அரசால் தொடங்கப் பெற இந்த அரசு தொடர்ந்து தீவிர முயற்சி மேற் கொள்ளும்” என்று சுட்டிக்காட்டியதையொட்டி, நதிநீர் இணைப்பு பற்றி, மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளின் கவனத்தையும் ஈர்த்திடும் வகையில், தேசிய வளர்ச்சிக்குழுக் கூட்டத்திலும் நான் விரிவாக எடுத்துரைத் திருக்கிறேன். நிதிநிலை அறிக்கையில் அறிவித்ததோடு நில்லாமல், வெள்ள அபாயத்தைத் தடுப்பதற்கும், வெள்ள நீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுத்து, வறட்சிப் பகுதி களுக்கு நீரை எடுத்துச் செல்வதற்கும், மாநிலத்திற்குள் பாயும் நதிகளை இணைக்கும் 5திட்டம் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில்தான் தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்டது. 

திருச்சிக்கு அருகே மாயனூரில் உபரி நீரை வறண்ட மாவட்டங்களுக்குக் கொண்டு செல்வதற்கான காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தின் கீழ், காவிரியின் குறுக்கே கட்டளையில் கதவணை கட்டும் பணிகள் 189 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனுமதிக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன. தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்புத் திட்டத்திற்காக 369 கோடி ரூபாய் மதிப்பீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன. பெண்ணையாற்றுடன் செய்யாற்றை இணைக்கும் திட்டத்திற்கு 174 கோடி ரூபாய்க்கான கருத்துரு மத்திய அரசின் நீர்க் குழுமத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.

நதிநீர் இணைப்பு பற்றி இப்போது வாய்கிழியப் பேசும் ஜெயலலிதா, காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கான பணிகளையும், தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்புத் திட்டத்திற்கான பணிகளையும் கழக ஆட்சிக் காலத்தில் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து நிறைவேற்றிட, அ.தி.மு.க. ஆட்சியில் என்ன முயற்சி எடுக்கப்பட்டது என்பதை ஜெயலலிதா விளக்க முன் வருவாரா? ஆத்திரத்தில் அரைவேக்காட்டு அறிக்கை வெளியிடுவது ஜெயலலிதாவா, நானா என்பதை தமிழக மக்கள் இப்போதாவது புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன் என்று மு.கருணாநிதி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா 2011 ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன், 29.07.2011 அன்று அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அவர்களுக்கு, முல்லைப்பெரியாறு அணைக் குறித்து விரிவானக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் முல்லைப்பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், மற்றும் துணக்கடவு ஆகிய அணைகள் தமிழகத்திற்குதான் சொந்தம் என்றும், அவற்றின் பாராமரிப்பும், செயல்பாடும் தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்றும், மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார் அக்கடிதத்தின் உண்மை நகல் நமது வாசகர்களின் கவனத்திற்கு இத்துடன் இணைத்துள்ளோம்.

pr300711_921 copy pr300711_922 copyமுல்லைப் பெரியாறு அணை தமிழ்நாட்டிற்கு சொந்தமானது என்றும், அணையின் பராமரிப்பும், இயக்கமும் தமிழக பொதுப்பணி துறையினரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்றும், முல்லைப் பெரியாறு அணை வலுவாகவே உள்ளது என்றும், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்றும், அணை தொடர்பாக கேரளா அரசு கொண்டு வந்த சட்டம் செல்லாது என்றும், நீதிமன்றத் தீர்ப்புகளை சட்டம் மூலம் தடுக்க முடியாது என்றும், கேரள அரசு கொண்டு வந்த சட்டம் அரசியல் சாசனத்துக்கு புறம்பானது என்றும், அணையை பராமரிக்க 3 பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்றும் 07.05.2014 அன்று உச்ச நீதிமன்றம் விரிவாகவும், மிகத் தெளிவாகவும் தீர்ப்பளித்துள்ளது.

மேலும், “முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், திருணக்கடவு மற்றும் பெருவாரிப் பள்ளம் ஆகிய நான்கு அணைகளும் இப்போது கேரளாவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன என்று கேரள மாநில சட்டப் பேரவையில் நடைப்பெற்ற விவாதத்தைக் குறிப்பிட்டு அறிக்கை வெளியீட்டு உள்ளீர்கள்.  

2009- ம் ஆண்டு தேசியப் பதிவேட்டில்  பக்கம் 194 முதல் 197 வரையும், 2012 -ம் ஆண்டு தேசியப் பதிவேட்டில் பக்கம் 81-யும் பாருங்கள். அணை இருக்கும் இடம்தான் கேரளாவைத் தவிர அனைத்து உரிமைகளும் தமிழக பொதுப்பணி துறையினரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்ற உண்மை உங்களுக்கு மட்டுமல்ல, உலகத்திற்கே தெரியும்.

ஆட்சியில் இருப்பவர்களுக்குத் தானே தேசியப் பதிவேட்டின் விவரங்கள் அனைத்தும் தெரியும். ஆனால், எதிர்க்கட்சியில் இருக்கும் என்னைப் பார்த்து 2012-ஆம் ஆண்டில் ஏன் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்று கேட்டால் அப்படிக் கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது என்பதை நடுநிலையாளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கேடடுள்ளீர்கள்.

அப்போது மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்த உங்களுக்கு தெரியாமலா இந்த விசியம் நடந்திருக்கும்? தேசியப் பதிவேட்டின் உண்மை நகல் என்னிடம் இருக்கும் போது, 75 ஆண்டு காலம் அரசியல் பொதுவாழ்க்கை,  5 முறை தமிழக முதலமைச்சராக இருந்த உங்களிடம் இல்லாமலா இருக்கும்? யாரை ஏமாற்றுவதற்கு இந்த அறிக்கை நாடகம்?

அய்யோ பாவம்! ஒரு மனிதன் கள்ளையும் குடித்து, அவனுக்கு பைத்தியமும் பிடித்து, அவனுக்கு தேளும் கொட்டினால் எப்படி இருக்கும்? அது போன்ற மதி மயக்கத்திலும், மனக்குழப்பத்திலும்தான் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி இருக்கிறார்.

திருமண வீட்டிற்கு சென்றால், தானே மாப்பிள்ளையாக இருக்க வேண்டும். இழவு வீட்டிற்கு சென்றால், தானே பிணமாக இருக்க வேண்டும் என்று நினைக்க கூடியவர் மு.கருணாநிதி. ஏனென்றால் அப்போதுதான் மாலை, மரியாதை எல்லாம் தனக்கே கிடைக்கும். அந்த மனநிலையில்தான் இன்றும் இருக்கிறார்.

அதனால் தான் முல்லைப் பெரியாறு அணைப்பிரச்சனையில் தேவையில்லாத வதந்தியை பரப்பி, பிதற்றி வருகிறார். பாவம் அவர் என்ன செய்வார்? இது அவரது பிறவி குணம்.

1959-ல் சென்னை மாநகராட்சித் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதற்காக, அந்த வெற்றிக்கு அரும்பாடுபட்டவன் என்ற முறையில் எனக்குப் பரிசளிப்பதற்காக அறிஞர் அண்ணா அவர்கள் கடை கடையாக ஏறி இறங்கி ‘கணையாழி’ (மோதிரம்) ஒன்றை வாங்கி வந்து கடற்கரைப் பொதுக்கூட்டத்தில் தனக்கு பரிசாக அணிவித்ததாக பல்லாண்டுக் காலமாக மு.கருணாநிதி சொல்லி வருகிறார்.

ஆனால், உண்மையில் என்ன நடந்தது என்பதை கவியரசு கண்ணதாசன், தனது ‘வனவாசம்’ என்ற புத்தகத்தில் 277-ம் பக்கம் கணையாழியும், கசப்பும் என்றத் தலைப்பில் அம்பலப்படுத்தியுள்ளார். நீங்களும் படித்துப் பாருங்கள் மு.கருணாநிதியின் சுயரூபம் தெரியும்.

அடுத்தவர்களின் உழைப்பில் கிடைத்த வெற்றியைக் கூட, தனது வெற்றியாக மாற்றக்கூடியவர் மு.கருணாநிதி. இதை நான் சொல்லவில்லை. ஒரு காலத்தில் மு.கருணாநிதியுடம் நகையும், சதையுமாக பழகிய கவியரசு கண்ணதாசன் கூறியுள்ளார்.

அண்ணா உயிருடன் இருந்தபொழுதே இந்தப் புத்தகம் வெளிவந்துவிட்டது. தான் இறக்கின்ற வரையிலும் இந்தப் புத்தகத்தைப் பற்றி அண்ணா கருத்து சொல்லவில்லை. காரணம், அவ்வளவு ‘உண்மைகள்’ இந்தப் புத்தகத்தில் குவிந்து கிடக்கின்றன.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் யானை பலத்தோடு இருந்த போதெல்லாம் தமிழகத்தின் உரிமைகள் பற்றியும், தமிழக மக்களின் நலன்கள் பற்றியும், எள் அளவும், எள் முனையளவும் கவலைப்படாத முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி. தான், தன்குடும்பம், தன் பெண்டு, பிள்ளைகள், தன் பேரப்பிள்ளைகள் என்ற குறுகிய வட்டத்திற்குள் அடைபட்டுக்கிடந்தார்.

இப்போது ஆட்சி அதிகாரத்தை இழந்தப் பிறகு, இழந்துப் போன அரசியல் செல்வாக்கை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்காகவும், குடும்ப உறுப்பினர்களின் குடுமிப்பிடி சண்டையில் காணாமல் போகும் தன் கட்சியை தூக்கிப் பிடிப்பதற்காகவும், தமிழக மக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்ப்பதற்காகவும், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தற்போது கபட நாடகமாடி அறிக்கை அரசியலை நடத்தி வருகிறார்.

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களே! தங்கள் மனச்சாட்சியை தொட்டு சொல்லுங்கள்! தமிழகத்தின் உரிமைகளைப் பற்றி பேசுவதற்கு தங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? ஆனா, ஊனா 75 ஆண்டு காலம் அரசியல் பொதுவாழ்க்கை, 5 முறை தமிழக முதலமைச்சர் என்று மூச்சுக்கு முன்னூறு தடவைப் பீற்றிக் கொள்ளும் தாங்கள், இதுவரை தமிழகத்திற்காக என்ன சாதித்தீர்கள்? இது நாள்வரை சாதிக்காத விசயத்தையா இனிமேல் சாதிக்கப் போகிறீர்கள்? போங்க சார், முதலில் உங்கள் தி.மு.க கட்சியையும், கலைஞர் தொலைக்காட்சியையும் காப்பாற்றப் பாருங்கள். மற்ற விசியத்தையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம்.

– டாக்டர்.துரைபெஞ்சமின்.

E.Mail: drduraibenjamin@yahoo.in

 

 

strong