இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சவிற்கு, பஹ்ரெய்ன் அரசாங்கம் விருது!

mahinda_bahrain_king mahinda_bahrain_king1இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்ற விவகாரம் தொடர்பாக, இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சவை, சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்று உலக நாடுகளும், சர்வதேச சமூகத்தினரும் குரல் கொடுத்து வரும் இந்நிலையில், பஹ்ரெய்ன் அரசாங்கம் அந்நாட்டின் மிகப்பெரிய விருதான காலீபா விருதை இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சவிற்கு வழங்கி கௌரவித்துள்ளது.

இரு தரப்பு உறவுகளை மேம்படுத்திக் கொள்வதற்கு இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச வழங்கிய பங்களிப்பினை பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, சவூதி மன்னர், மலேசிய பிரதமர், இரண்டாம் எலிசபத் மஹாராணி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு ள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த மன்னர் சேக் இசாபின் சல்மான் அல் காலீபா, மனிதாபிமானத்திற்கு வழங்கிய உன்னத சேவையை போற்றும் நோக்கில் காலீபா விருது வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

பஹ்ரெயினுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷ, அங்கு முக்கியமான மூன்று உடன்படிக்கைளில் கையெழுத்திட்டுள்ளார்.

விளையாட்டு, கலாசரம் மற்றும் கலைத்துறை சார்ந்த மூன்று ஒப்பந்தங்கள் இவ்வாறு கையெழுத்தாகியுள்ளன.

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷ, பஹ்ரெயின் மன்னர் ஹமாட் பின் இசா அல் காலிஃபாவை அவரது அரச மாளிகையில் சந்தித்தார்.

அத்துடன் அந்த நாட்டின் பிரதமர் இளவரசர் காலிஃபா பின் சல்மான் பின் ஹமாட் அல் காலிஃபா உள்ளிட்ட பலரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்புகளின் போது இரண்டு நாடுகளின் உறவுகள் தொடர்பிலும், வர்த்தக தொடர்பிலும் சிறப்பான கவனம் செலுத்தப்பட்டுள்ளது.