காவிரி நதிநீர் பிரச்சனையில் துரோகம் செய்த பா.ஜ.க தலைவர்களுக்கு தமிழகத்தைப் பற்றி பேசுவதற்கு என்ன தகுதியிருக்கிறது?

முரளிதரராவ்2ஜெயலலிதா தனக்கு சாதகமான விஷயங்களை மட்டும் முன்வைத்து குற்றச் சாட்டை எழுப்பியுள்ளார் என்றும், குஜராத் மற்றும் தமிழகத்தின் வளர்ச்சி பற்றி விவாதிக்க நாங்கள் தயார் என்றும், ஜெயலலிதா மட்டும் அல்ல, இந்தியாவில் யார் வேண்டுமானாலும் குஜராத் வளர்ச்சி பற்றி எங்களுடன் விவாதம் செய்யலாம் என்றும், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்து வரும் ஆதரவு ஜெயலலிதாவுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், தமிழகத்தை விட குஜராத் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்த மாநிலமாக உள்ளது என்றும், பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் 19.04.2014 அன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.

இவருக்கெல்லாம் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

சென்னையை சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் இணைய ஊடகத்தில் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை பாருங்கள் (இதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது) நான் நரேந்திரமோதி ஆதரவாளர் தான். குஜராத்தை விட, தமிழகம் பல அளவுகோல்களில் (parameters) முன்னணியில் இருக்கிறது. நரேந்திரமோதியை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காக பா.ஜ.க.வினர், இவற்றை மறைக்க முடியாது. தமிழகத்தைக் குறைத்து மதிப்பிடக் கூடாது.

அதற்கென்ன, சில பெரும், பெரும் பணக்காரத் தொழில் அதிபர்கள் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். அவ்வளவு பெரிய பண முதலைகள் தமிழகத்தில் இல்லை.

மேலும், குஜராத் தொழிலதிபர்கள், தெற்கில் இருந்து எண்ணெய் மற்றும் எரி வாயு வளத்தை அகழ்ந்தெடுத்து குஜராத்தில் தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தி அங்கு வளம் கொழிக்கச் செய்கின்றனர்.

நரேந்திரமோதியிடம் எனக்கிருக்கும் சிறு பயம், அவர் பிரதமரான பிறகு குஜராத்தின் ஏகபோக பிரதிநிதி மட்டுமே என்று எண்ணாமல், மொத்த இந்தியாவையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதற்கு பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் என்ன பதில் சொல்ல போகிறார்?

பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ்க்கு நான் சில கேள்விகளை கேட்க விரும்புகின்றேன் :

2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 தேதி முதல் 2013 ஆம் ஆண்டு மே மாதம் 12 தேதி வரை (இடையில் 20.11.2007 – 27.05.2008 ஆறு மாதங்கள் தவிர) கர்நாடாகாவை ஆட்சி செய்தது யார்? பாரதிய ஜனதா கட்சித்தானே?

காவிரி நதிநீர் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் அளித்த எந்த உத்தரவையாவது உங்கள் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியாளர்கள் மதித்தார்களா?

நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடுவதற்கு உங்கள் பாரதிய ஜனதா கட்சி ஒத்துழைப்பு கொடுத்ததா?

காவிரியில் தண்ணீர் வராமல் தமிழக மக்களும், தமிழக விவசாயப் பெருமக்களும் வறட்சியால் பரிதவித்தபோதும், ஆடு, மாடுகள் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் தமிழக மக்கள் அவதிப்பட்டபோதும் உங்கள் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியாளர்கள் காவிரியில் தண்ணீர் திறந்து விட்டார்களா?

உச்சநீதிமன்றத்தின் கட்டளைக்கு மறு பேச்சு பேசாமல் காவிரி நதியில் தண்ணீர் திறந்து விடுவது பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு 29.11.2012 அன்று பெங்களுருக்கு வந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவிடம் அப்போது கர்நாடக முதல்வராக இருந்த பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஜெகதீஸ் ஷெட்டர், தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்கமாட்டோம் என்று சொன்னாரா? இல்லையா?

அப்போதெல்லாம் நீங்களும், உங்கள் பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத்தலைவர்களும் இந்தியாவில் தான் இருந்தீர்களா? அல்லது செவ்வாய் கிரகத்தில் குடியிருந்தீர்களா?

காவிரி நதிநீர் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சி எடுத்த நிலைப்பாட்டிருக்கும், உங்கள் பாரதிய ஜனதா கட்சி எடுத்த நிலைப்பாட்டிருக்கும் என்ன வித்தியாசம்? தேசிய கட்சிகளின் லட்சணம் இதுதானா?

நாடளுமன்றத் தேர்தல் என்றதும் தமிழக மக்களின் வாக்குகளை வாங்குவதற்காக, தமிழகத்தில் கூடாரம் அமைத்து கூட்டணி கட்சிகளை கண்காணித்து வரும் தாங்களும், மாதத்திற்கு ஐந்து முறை தமிழகத்திற்கு வருகை தந்து வாய்கிழிய பேசி செல்லும், உங்கள் பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத்தலைவர்களும், காவிரி நதிநீர் பிரச்சனை பற்றி இதுவரை ஒரு வார்த்தை கூட பேசாமல் இருக்கிறார்களே அது ஏன்?

தமிழகத்திற்குள் உள்ளே வருவதற்கும், தமிழக மக்களிடம் வாக்கு கேட்பதற்கும் உங்களுக்கு என்ன யோக்கிதை இருக்கிறது? உங்கள் மனசாட்சி உங்களை உறுத்தவில்லையா?

இவ்வளவு ஏன்? மனிதருள் புனிதர் என்றும், எதிர்காலத்தில் இவர்தான் இந்திய திருநாட்டின் பிரதமர் என்றும், தங்கள் கட்சினரால் பெருமையாக பேசப்பட்டு வரும் நரேந்திரமோதி, காவிரி நதிநீர் பிரச்சனை பற்றி தமிழகத்தில் ஒரு வார்த்தை கூட பேசாமல், தமிழகத்தில் மின்சாரமும், குடிநீர் தட்டுபாடும் பெரும் பிரச்சனையாக இருக்கிறது என்று பேசுவது எவ்வளவு பெரிய அரசியல் பித்தலாட்டம்! இவரை எப்படி தமிழக மக்கள் பிரதமராக ஏற்றுக் கொள்வார்கள்?

தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல! என்பதை இத்தேர்தல் மூலம் நிச்சயம் நிரூபிப்பார்கள்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.