சிங்கள வெறியர்களை நடுங்க வைத்த ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கை!

நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க

நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க

jhu_logo

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெ.ஜெயலலிதா, நாடாளுமன்றத் தேர்தலுக்கான அ.இ.அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை, தலைமைக் கழக அலுவலகத்தில் 25.02.2014 அன்று வெளியிட்டார்.

தமிழக மீனவர் நலன், கச்சத்தீவு மீட்பு, இலங்கைத் தமிழர் பிரச்னை, இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை, தனி ஈழம் அமைந்திட இலங்கைத் தமிழர்களிடம் வாக்கெடுப்பு, ஐ.நா.சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க நடவடிக்கை என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கைஇந்திய அரசியலை மட்டுமல்ல, இலங்கையில் உள்ள சிங்கள பௌத்த அரசியல்வாதிகளையும் நடுங்க வைத்துள்ளது. இதனால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சிங்கள வெறியர்கள் வாய்க்கு வந்தபடி வசைப்பாட தொடங்கிவிட்டார்கள்.

ஜாதிக எல உறுமய (Jathika Hela Urumaya), என்பது இலங்கையின் சிங்கள பௌத்த பிக்குகளைத் தலைவர்களாகக் கொண்ட ஒரு அரசியல் கட்சியாகும். இக்கட்சி 2004 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் சிங்களத் தேசியவாதக் கட்சியான சிஹல உறுமய என்ற அமைப்பினால் உருவாக்கப்பட்டது. இதன் ஆரம்பகால உறுப்பினர்களாக கொலன்னாவ சுமங்கல தேரோ, உடுவே தம்மலோக்க தேரோ, எல்லாவல மெத்தானந்த தேரோ, டாக்டர். சோபித்த தேரோ, திலக் கருணாரத்தின ஆகியோர் உள்ளனர்.

இலங்கையில் 2004, ஏப்ரல் 2 இல் நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் முதல் தடவையாகப் போட்டியிட்டு மொத்தமாக 6.0% வாக்குகளைப் பெற்று 225 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 9 இடங்களைக் கைப்பற்றியது.

இவர்களில் 8 உறுப்பினர்கள் 2007 ஆம் ஆண்டில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இணைந்தனர். 2010 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடாமல், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் கீழ் போட்டியிட்டது. இக்கட்சியின் ஊடக செயலாளராக இருப்பவர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க.

தமிழ் நாட்டை தனிநாடாக உருவாக்கி, இங்குள்ள தமிழர்களை அங்கு அழைத்துச் செல்லுங்கள் என ஜாதிக ஹெல உறுமயவின் ஊடக செயலாளரும் மேல் மாகாண வேட்பாளருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை – பண்ணிப்பிட்டிய வீதியில் அமைந்துள்ள அந்த கட்சியின் தலைமையகத்தில் 07.03.2014 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஜாதிக ஹெல உறுமயவின் ஊடக செயலாளரும் மேல் மாகாண வேட்பாளருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவிக்கையில், தேர்தல் விஞ்ஞாபனத்தை (அறிக்கை) வெளியிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, இலங்கையின் வடக்கு, கிழக்கில் தமிழர்களுக்கு தமிழீழ நாட்டை உருவாக்கி தருவதாக கூறியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சரான அவர் இந்தியாவின் பிரதமரான வரபோவதாக பேசி வருகிறார். இந்திய பிரதமராக பொறுப்பேற்ற பின்னர், இலங்கையை ஆக்கிரமித்தாவது ஈழத்தை உருவாக்க போவதாக பிதற்றி வருகிறார்.

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு ஈழத்தை உருவாக்கி கொடுக்கும் முன்னர் தமிழ் நாட்டில் உள்ள மக்களுக்கு உண்ணவும், குடிக்க கொடுத்து, அங்கு மின்சாரத்தை வழங்கி, வீடுகளை நிர்மாணித்து கொடுத்து, கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு நாங்கள் ஜெயலலிதாவுக்கு கூறவிரும்புகிறோம்.

தேவையானால் தமிழ் நாட்டை தனிநாடாக உருவாக்கி, இங்குள்ள தமிழர்களை அங்கு அழைத்துச் செல்லுங்கள். அதனை நாங்கள் எதிர்க்கவில்லை. தமிழ் நாடே தமிழ் ஈழ வாதத்தின் கேந்திர நிலையம் என்பது எங்களுக்கு தெரியும்.

70 ஆம் ஆண்டுகளில் தமிழ் நாட்டில் இருந்தே தமிழ் பிரிவினைவாத பயங்கரவாதிகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டனர். இதனால் மூன்று தசாப்தகாலமாக பாதிப்புகளை அனுபவித்தோம். அத்துடன் பாரிய உயிர் சேதங்களும் பொருட் சேதங்களும் ஏற்பட்டன. நாட்டின் அபிவிருத்தி பின்நோக்கி சென்றது. பயங்கரவாத்தில் இருந்து நாட்டை மீட்க 26 ஆயிரம் படையினர் உயிர்களை தியாகம் செய்ததுடன் 24 ஆயிரம் பேர் அங்கவீனமடைந்தனர்.

எமது நாட்டில் செய்த அழிவுகளுக்கு தமிழ் நாடு பொறுப்புக் கூறவேண்டும். சர்வதேச போர் குற்ற நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமாயின் தமிழ் புலிப் பயங்கரவாத்திற்கு அணுசரனை வழங்கி, பாதுகாப்பு வழங்கிய தமிழ் நாட்டு அரசியல்வாதிகளையே கொண்டு செல்ல வேண்டும்.

ஜெயலலிதா போன்றவர்களை மின்சார நற்காலியில் வைக்கக் கூடாது. 10 கசையடிகளை கொடுத்து தூக்கிலிட்டு கொலை செய்ய வேண்டும். இலங்கை மன்னர் காலத்தின் தண்டனையே இவர்களுக்கு பொருத்தமானது.

இலங்கையின் இறுதி மன்னரான தென்னிந்திய நாயக்கர் வமசத்தை சேர்ந்த ஸ்ரீ விக்ரம ராஜசிங்கன் மன்னன், ஹெலபொல அதிகாரத்தின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு வழங்கிய தண்டனையே ஜெயலலிதாவுக்கு வழங்க வேண்டும்.

எம்.ஜி. ராமசந்திரனுடன் தமிழ் படங்களில் நடனம் ஆடிவிட்டு இன்று அரசியலுக்கு வந்து எமது நாட்டை அச்சுறுத்துவதை கண்டு நாங்கள் அஞ்சவில்லை என்பதை ஜெயலலிதாவுக்கு கூறிவைக்க விரும்புகிறோம் என நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.