நாங்கள் ஊர் குருவியல்ல! பீனிக்ஸ் பறவை!

phoenixஊடகத்துறையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக, எந்தவித சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல், உண்மையை உயிராக மதித்து நமது உள்ளாட்சித் தகவல் இணைய ஊடகம் செயல்பட்டு வருகிறது என்பதை நமது வாசகர்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள். ஆனால் கடந்த இரண்டு மாதங்களில் மூன்று முறை நமது உள்ளாட்சித் தகவல் இணைய ஊடகம் சைபர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

CyberAttackதற்போது மூன்றாவது முறையாக இன்று (02.04.2013) சற்று நேரத்திற்கு முன்பு சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி நமது இணைய ஊடக சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. மூன்று முறை நடந்த இந்த தாக்குதல் பாகிஸ்தான் பெயரை பயன்படுத்தி நமது ஊடகத்தை தாக்கியுள்ளனர். ஆனால், இத்தாக்குதல் பாகிஸ்தானியரின் சதியாக இருக்க வாய்ப்பில்லை.

நமது ஆதாரப்பூர்வமான செய்திகளால் உலக அரங்கில் அவமானப்பட்டுவரும் நபர்களின் சதியாகத்தான் இருக்கக் கூடும் என்பது இதன் மூலம் தெள்ளத் தெளிவாக தெரிகின்றது. இந்த சலசலப்பிற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். ஏனென்றால், நாங்கள் ஊர்க்குருவியல்ல! பீனிக்ஸ் பறவை!

எமது இலட்சியப் பயணம்…!

ஒரு கோடி துன்பங்கள் எமைச் சூழ்ந்த போதிலும்
ஒருபோதும் கலங்கமாட்டோம்!

பொருள் கோடி தந்தாலும் புகழ்தேடி வந்தாலும்
பொய்வாழ்வு வாழமாட்டோம்!

கதியில்லா ஏழைகள் கண்ணீரில் குளிக்கையில்
கை கட்டி நிற்கமாட்டோம்!

விதியென்றப் பெயராலே கொடுமைகள் நடக்கையில்
வேடிக்கைப் பார்க்க மாட்டோம்!

துப்பாக்கித் தோட்டாக்கள் எம் நெஞ்சை
துளைத்திட்ட போதிலும் தூரவே ஓடமாட்டோம்!

பாட்டாளி மக்களின் படைவீரனாகுவோம்
பயந்து அஞ்சி நடுங்க மாட்டோம்!

உடல் வருத்தி உழைக்கின்ற ஏழை மக்களை வணங்குவோம்
எவரையும் வணங்க மாட்டோம்!

ஏழ்மையில் வாடுகின்ற குழந்தையைப் பாடுவோம்
எவரையும் துதிப்பாட மாட்டோம்!

எரிகின்ற தீயிலே எம் உடல் வீழ்ந்தாலும்
இலட்சியம் மாறமாட்டோம், சத்தியம் தவறமாட்டோம்!

எழில் மலராய் மக்கள் இதயத்தில் வாழ்வோம்- நாங்கள்
செயல் வடிவில் என்றுமே சாகமாட்டோம்!

                                  என்றும் தோழமையுடன்,
                                   டாக்டர்.  துரை பெஞ்சமின்
                                    ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர்

Leave a Reply