அரசு பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்

pr010413aமுதலமைச்சர் ஜெயலலிதா, சென்னை கோட்டையில், தமிழகத்திலுள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில் 151 உதவிப்பேராசிரியர்கள் மற்றும் அரசு பலவகை தொழில்நுட்பக்கல்லூரிகளில் 134 விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இது குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

தமிழகத்தில் செயல்பட்டுவரும் அரசு பொறியியல் கல்லூரிகளில் காலியாகவுள்ள 154 உதவி பேராசிரியர் பணியிடங்கள் மற்றும் அரசு பலவகை தொழில்நுட்பக்கல்லூரிகளில் காலியாகவுள்ள 139 விரிவுரையாளர் பணியிடங்கள் விரைந்து நிரப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. அந்த அறிவிப்பிற்கிணங்க, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டித்தேர்வு நடத்தப்பட்டு, அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு 151 உதவி பேராசிரியர்களும், அரசு பலவகை தொழில்நுட்பக்கல்லூரிகளுக்கு 134 விரிவுரையாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்திலுள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில் 151 உதவிப்பேராசிரியர்கள் மற்றும் அரசு பலவகை தொழில்நுட்பக்கல்லூரிகளில் 134 விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா  பணி நியமன ஆணைகளை வழங்கி, ‘‘மாணவ–மாணவியர்களுக்கு சிறந்த முறையில் கல்வி பயிற்றுவித்து, அவர்தம் வாழ்வில் உயர்ந்திடும் வகையில் பணியாற்றிட வேண்டும்’’ என்று புதிதாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி வாழ்த்தினார்.

முதலமைச்சர் ஜெயலலிதாவிடமிருந்து பணி நியமன ஆணைகளைப் பெற்றுக்கொண்ட உதவி பேராசிரியர்களும், விரிவுரையாளர்களும் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை முதலமைச்சருக்குத் தெரிவித்துக் கொண்டார்கள். இந்த நிகழ்வின் போது, உயர்கல்வித் துறை அமைச்சர், தலைமைச்செயலாளர், உயர்கல்வித் துறை முதன்மைச்செயலாளர், உயர்கல்வித் துறை கூடுதல் செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர். இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply