சட்டசபையில் தமிழக முதலமைச்சரால் முன்மொழியப்பட்ட தீர்மான வாக்கியங்கள் சிறந்த அரசியல் முதிர்ச்சியனையும், ஆளுமையினையும் வெளிப்படுத்துகிறது: ஜெயலலிதாவுக்கு நாடு கடந்த தமிழீழ பிரதமர் ருத்ரகுமாரன் பாராட்டு

Rutrakumarநாடு கடந்த தமிழீழ பிரதமர் ருத்ரகுமாரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னெடுப்பில் நேற்றைய தினம் வரலாற்றுச் சிறப்புமிகு தீர்மானமொன்றை தமிழக சட்டமன்றப் பேரவை ஏகமனதாக நிறைவேற்றியிருக்கிறது. இத்தகையதொரு உறுதியான தீர்மானத்தை நிறைவேற்றியமைக்காக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் ஏனைய கட்சித்தலைவர்களுக்கும், தமிழக மக்களுக்கும் ஈழத்தமிழர் தேசத்தின் சார்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது பெருமகிழ்ச்சியையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழக முதலமைச்சரால் முன்மொழியப்பட்ட தீர்மான வாக்கியங்கள் ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் நிலைப்பாட்டையும் ஸ்ரீலங்கா அரசின் தமிழின விரோதப் போக்கையும் அனைத்துலகப் பொறிமுறை குறித்த புரிதலையும் நன்கு உள்வாங்கி தயாரிக்கப்பட்ட ஒரு சிறந்த அரசியல் முதிர்ச்சியனையும், ஆளுமையினையும் வெளிப்படுத்துகிறது இத்தகையதொரு சிறப்புமிகு தீர்மானத்தை நிறைவேற்றித் தந்தமைக்காக முதலமைச்சரை நாம் மனமுவந்து பாராட்டுகிறோம்.

தமிழக சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்துக்கு இந்திய மத்திய அரசு உரிய மதிப்பினை வழங்க வேண்டும் என நாம் கோருகிறோம். இத்தீர்மானத்தில் கோரப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசினைத் தூண்டுவதற்கான செயல்பாடுகளையும் தமிழக முதலமைச்சர் தலைமையில் தமிழகம் மேற்கொள்ள வேண்டும் எனவும் தோழமையுடன் கோருகிறோம்.

இத்தருணத்தில் தமிழகத்தில் ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவான போராட்ட தீயை கனலச் செய்து வரும் தமிழக மாணவர்களின் கரங்களைத் தோழமையுணர்வுடன் பற்றிக் கொள்கிறோம். தமிழக சட்டமன்றப் பேரவையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்திய மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் மட்டுமே இத்தீர்மானம் செயல் வடிவம் பெறும்.

இத்தீர்மானத்தை இந்திய மத்திய அரசை ஏற்றுக் கொள்ளச் செய்யும் ஆற்றல் தமிழக மாணவர்களிடம் உள்ளது என்று நாம் கருதுகிறோம். இதற்கான செயற்பாடுகளை ஒரு திட்டமிடப்பட்ட வேலைத் திட்டம் ஊடாகத் தமிழக மாணவர்கள் தொடர்ச்சியாக முன்னெடுப்பார்கள் என நாம் உறுதியாக நம்புகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply