மகன் சாவிற்கு நீதி கிடைக்கவில்லை: பிரதீபா காவேரி கப்பல் விபத்தில் பலியான நிரஞ்சனின் பெற்றோர் தற்கொலை!

Pratibha-CauveryNERANJANசென்னையில் பிரதீபா காவேரி கப்பல் விபத்தில் பலியான அரக்கோணம் பொறியாளர் நிரஞ்சனின் பெற்றோர், தங்கள் மகனை இழந்த சோகம் தாளாமல் தங்கள் வீட்டில் 22.02.2013 வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

er.niranjan parentsகடந்த 2012ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி தமிழகத்தை நிலம் புயல் தாக்கியபோது, மும்பை தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பிரதீபா காவேரி எனும் சரக்கு கப்பல் சென்னை மெரீனா கடற்கரையில் தரைதட்டி நின்றது. அந்தக் கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதாக வந்த தகவலையடுத்து அதில் இருந்த பணியாளர்கள் வெளியே தப்பமுயன்று கடலில் குதித்தனர். இதில் 5 பேர் நீரில் முழ்கி இறந்தனர்.இவர்களில் வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகரையொட்டிய ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த கோதண்டபாணியின் மகன் நிரஞ்சனும் (24) ஒருவர். இவர் கோவையில் மெரைன் என்ஜினீயரிங் படிப்பை முடித்து முதன் முதலாக பிரதீபா காவேரி கப்பலில் பணியில் சேர்ந்துள்ளார். பணியில் சேர்ந்த 6 மாதங்களில் இச்சம்பவம் நேரிட்டுள்ளது. இதையடுத்து, அப்போது அவரது குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ1.5 லட்சத்தை சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தினர் வழங்கினர்.

தங்களது ஒரே மகனை இழந்த சோகத்தில் கடந்த 4 மாதங்களாக நிரஞ்சனின் தந்தை கோதண்டபாணி (58), தாய் பாரதி (50) ஆகிய இருவரும் வீட்டை விட்டு வெளியே வராமலேயே இருந்துள்ளனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை நிரஞ்சனின் சித்தி ராஜம்மா, தனது அக்காவை காணச் சென்றபோது வீட்டில் மின்விசிறியில் ஒரே கயிற்றின் ஒரு முனையில் கோதண்டபாணியும், மறுமுனையில் பாரதியும் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்தது.

இறப்பதற்கு முன் கோதண்டபாணி, அரக்கோணம் நகர காவல் ஆய்வாளர், சென்னை நீதிபதிகள், அரக்கோணம் நகர மருத்துவமனை மருத்துவ அதிகாரி ஆகியோருக்கென தனித்தனியே ஆங்கிலத்தில் 3 கடிதங்களை எழுதி வைத்துள்ளார். இதில் கணவருடன் அவரது மனைவி பாரதியும் கையெழுத்து போட்டுள்ளார்.

கோதண்டபாணி தனது கடிதத்தில் தங்களது 28-ஆவது திருமண நாளில் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், இந்த நாளே தங்களது இறுதி நாளாகி விட்டது. தனது மகன் சாவிற்கு நீதி கிடைக்கவில்லை.

அவனது சாவிற்கு காரணமாக கப்பலின் கேப்டன் மீது நடவடிக்கை இல்லை. மகனின் சாவால் தவித்த எங்களுக்கு எந்த உதவியும் இல்லை. அவனை இழந்துவிட்ட நாங்கள் இன்று பிச்சைக்காரர்களாகி விட்டோம். வங்கிக்கடன் கூட வாங்காமல் எங்களின் ஒரே மகனை உயர்படிப்பு படிக்க வைத்து இந்த நிலைமைக்கு நாங்கள் ஆளாகி விட்டோம்.

சென்னை நீதிமன்றங்களிலும் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. எங்களது கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் பிற உடலுறுப்புகளை எடுத்து தேவைப்படுவோருக்கு பொருத்துங்கள் என்று தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் குறித்து தகவலறிந்த அரக்கோணம் நகர காவல் ஆய்வாளர் சரவணன், சடலங்களைக் கைப்பற்றி அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

கண்கள் தானம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது, அவர்கள் இறந்த 2 மணி நேரத்திற்குள் கண்களை எடுக்கவேண்டும். ஆனால் இறந்த விவரம் பல மணி நேரத்துக்குப் பின்னரே தெரியவந்ததால் கண்களை எடுப்பதற்கு சாத்தியமில்லை என்றனர்.

Leave a Reply