சென்னையில் மலிவு விலை உணவகங்கள்: முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

pr190213gசென்னை நகரில் வாழும் ஏழை-எளிய மக்கள், அன்றாடம் கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுனர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்களும் சென்னைக்கு பணி நிமித்தமாக வந்து செல்பவர்களும் பயன்பெறும் வகையில் சுகாதாரமான மற்றும் தரமான உணவுகளை மலிவு விலையில் வழங்குவதற்காக சிற்றுண்டி உணவகங்கள் தொடங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு இருந்தார்.

இதன்படி சென்னை நகரில் முதலில் 200 வார்டுகளிலும் தலா ஒரு உணவகம் வீதம் 200 உணவகங்கள் திறக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. தற்போது ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு உணவகம் வீதம் 15 உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த உணவகங்களில் இட்லி, தயிர்சாதம், சாம்பார் சாதம் ஆகியவை விற்கப்படுகிறது. காலை 7 மணிமுதல் 10 மணி வரை இட்லி விற்கப்படும். மதியம் 12 மணி முதல் 3 மணி வரை தயிர்சாதமும், சாம்பார் சாதமும் விற்கப்படும்.

இட்லி விலை ரூ.1, தயிர் சாதம் ரூ.3, சாம்பார் சாதம் ரூ.5. ஒவ்வொரு உணவகத்திலும் 50 பேருக்கு மேல் நின்று சாப்பிடும்படி மேஜை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. உணவகங்களில் சமையல் கூடங்களில் சமையல் செய்வதற்கான கியாஸ் அடுப்புகள் மற்றும் தளவாட சாமான்கள் அனைத்தும் வைக்கப்பட்டுள்ளது. சுயஉதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் இந்த உணவகங்களை நிர்வகிப்பார்கள்.

அவர்களுக்கு சமையல் செய்வது, பரிமாறுவது, உணவகத்தை நிர்வகிப்பது தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு உணவகத்திலும் 15 பெண்கள் பணியாற்றுவார்கள். இந்த உணவகங்களில் வந்து சாப்பிடுவதற்கு மட்டுமே உணவு வழங்கப்படும். பார்சல் விற்பனை கிடையாது.

தினமும் 500 இட்லியும், மதியம் 500 பேருக்கு சாப்பிட சாம்பார் மற்றும் தயிர் சாதமும் தயாரிக்க உள்ளது. வரவேற்பபை பொறுத்து இந்த அளவு அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த திட்டத்துக்காக கிலோ ரூ.1 வீதம் மாதம் 500 டன் அரிசியை நுகர்பொருள் வாணிப கழகம் மாநகராட்சிக்கு வழங்குகிறது.

இந்த உணவகங்களை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று மதியம் 12.05 மணிக்கு தொடங்கி வைத்தார். இதற்கான விழா சாந்தோமில் உள்ள பதிவுத்துறை தலைவர் அலுவலகம் அருகிலுள்ள மாநகராட்சி கட்டிடத்தில் நடந்தது.

விழாவுக்கு வந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை அமைச்சர் கே.பி.முனுசாமி, மேயர் சைதை துரைசாமி ஆகியோர் பூக்கொத்து கொடுத்து வரவேற்றனர். ஏராளமான ஆண்களும், பெண்களும் அ.தி.மு.க. தொண்டர்களும் கூடியிருந்தனர்.

ஜெயலலிதாவுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. உணவகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். 15 உணவகங்களுக்கான கல்வெட்டுகளையும் திறந்து வைத்தார்.

அதன் பிறகு உணவு கூடத்துக்குள் சென்று இட்லி, சாம்பார் மற்றும் சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவை தயாரிக்கப்பட்டு இருப்பதை பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் அன்ன பூரணி, தாமரைக்கண்ணன், சரோஜா ஆகியோருக்கு உணவு பரிமாறினார்.

உணவகத்தை நிர்வகிக்கும் சுயஉதவி குழு பெண்களிடம் எப்படி உணவு தயாரிக்கிறீர்கள் என்று விசாரித்தார். உணவகத்தை நல்லபடியாக நடத்துங்கள் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

தொடக்க விழாவையொட்டி இன்று வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இலவசமாக ரவா கேசரி வழங்கப்பட்டது. இங்கு தொடங்கி வைக்கப்பட்ட அதே நேரத்தில் மற்ற 14 இடங்களிலும் மலிவு விலை உணவகங்கள் செயல்படத் தொடங்கின.

மலிவு விலை உணவகத்தில் தொடக்க நாளான இன்று கூட்டம் அலை மோதியது. வாடிக்கையாளர்கள் அனைவரும் மிகவும் ருசியாகவும், தரமாகவும் இருப்பதாக பாராட்டு தெரிவித்தனர். மலிவு விலை என்பதால் ஏழைகள், தொழிலாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறினார்கள்.

உணவகத்தை நிர்வகிக்கும் தீபம் மகளிர் குழு தலைவி சாந்தி கூறியதாவது:-

உணவு கூடத்தை நடத்துவதற்காக 3 நாட்கள் மாநகராட்சியில் எங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நல்ல முறையில் பயிற்சி எடுத்துள்ளோம். உணவு தயாரிப்பதற்கு தேவையான பாத்திரங்கள், அடுப்பு, கியாஸ் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. எங்களால் நல்ல முறையில் தரமான உணவு தயாரித்து வழங்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இங்கு தரமான உணவு தயாரித்து வழங்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க மாநகர நல அலுவலர் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. தொடக்க விழாவில் அமைச்சர்கள், கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இன்று திறக்கப்பட்ட 15 உணவகங்கள் அமைந்துள்ள பகுதிகள்

திருவொற்றியூர் மண்டலம், 11வது வார்டு, மாநகராட்சி வணிக வளாகம் டி.எச்.சாலை.

மணலி மண்டலம், 19 வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், 29-வது தெரு, மாத்தூர்.

மாதவரம் மண்டலம், 24 வது வார்டு, சமுதாய கூடம், சூரப்பட்டு.

தண்டையார் பேட்டை மண்டலம், 48 வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், பொம்மி சிவராமுலுதெரு, வண்ணாரப்பேட்டை.

ராயபுரம் மண்டலம், 55 வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், நாட்டுபிள்ளையார் கோவில் தெரு, மண்ணடி.

திரு.வி.க.நகர் மண்டலம், 79வது வார்டு, பழைய மண்டல அலுவலகம், அம்பேத்கர் சாலை, புளியந்தோப்பு

அம்பத்தூர் மண்டலம், 73வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், கட்டபொம்மன் தெரு, ஒரகடம்.

அண்ணாநகர் மண்டலம், 103வது வார்டு, பழைய மண்டல அலுவலகம், டெய்லர்ஸ் ரோடு, கீழ்ப்பாக்கம்.

தேனாம்பேட்டை மண்டலம், 126வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், சாந்தோம் நெடுஞ்சாலை.

கோடம்பாக்கம் மண்டலம், 136வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், சிவஞானம் சாலை, தி.நகர்.

வளசரவாக்கம் மண்டலம், 146 வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், பூந்தமல்லி ரோடு, வடக்குமாடவீதி அருகில், மதுரவாயல்.

ஆலந்தூர் மண்டலம், 166 வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், நேரு நெடுஞ்சாலை, நங்கநல்லூர்.

அடையாறு மண்டலம், 181வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், பி.ஜி.இ. காலனி, குப்பம் கடற்கரை சாலை, திருவான்மியூர்.

பெருங்குடி மண்டலம், 184 வது வார்டு, வணிக வளாகம், அண்ணா நெடுஞ்சாலை.

சோழிங்க நல்லூர் மண்டலம், 195வது வார்டு, குடிசை மாற்று வாரிய தொழிற்பயிற்சி கூடம், கண்ணகி  நகர் 2-வது பிரதானசாலை, துரைப்பாக்கம்.

Leave a Reply