மத்திய அரசிலிருந்து விலகத் தயாரா? திமுகவுக்கு வைகோ கேள்வி!

vaiko

ராஜபட்ச வருகையை தடுக்க முடியாவி்ட்டால் மத்திய அரசிலிருந்து விலகத் தயாரா? என்று திமுகவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

ம.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணாநகர் விஜயஸ்ரீ மஹாலில் இன்று (04.02.2013) நடந்தது.  பொதுக்குழு கூட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய ம.தி.மு.க. பொதுச்செயாளர் வைகோ,  திமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசு தான் இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கிறது.

எனவே, மற்ற கட்சிகளைப் போல ராஜபட்ச வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவும் அறிக்கை வெளியிடுவதை ஏற்க முடியாது. மத்திய அரசை வற்புறுத்தி ராஜபட்ச வருகையைத் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில் மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக வெளியேற வேண்டும். அதற்கு அக்கட்சி தயாரா? என்று கேள்வி எழுப்பினார்.

vaikoபொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

‘முன்னேறிச் செல்; அதிகாரத்தைக் கைப்பற்று’ என்று, கரூர் மாநாட்டில் செய்யப்பட்ட பிரகடன இலக்கை அடையும் குறிக்கோளுடன் மக்களைச் சந்திக்கின்ற வகையில், ‘முன்னேறிச் செல்’ எனும் பிரச்சாரப் பயணத்தை, வைகோ தலைமையில் நடத்துவது. இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களும், உலகெங்கிலும் உள்ள புலம் பெயர் ஈழத் தமிழர்களும் வாக்கு அளிக்கும் விதத்தில், சுதந்திரத் தமிழர் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கு உரிய ஆதரவை, இந்தியத் துணைக் கண்டத்தில் வாழுகின்ற பல்வேறு தேசிய இன மக்களிடமும், உலக நாடுகளிலும் உருவாக்கும் பணியை முன்னெடுத்துச் செல்வது.

தமிழ் நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக மத்திய அரசு அறிவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை, தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டுக்குச் சிறப்பு ஒதுக்கீடாக, வறட்சி நிவாரண நிதி அளிக்க மத்திய அரசு, முன்வர வேண்டும்.

அனைத்து விவசாயிகளுக்கும், ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பு ஈட்டுத் தொகை வழங்க வேண்டும். காவிரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட, மத்திய அரசு உடனடியாக காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசு இதழில் வெளியிட வேண்டும். தமிழ்நாட்டில் மின்சாரப் பற்றாக்குறையைப் போக்கிட தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை நிர்ணயம் கட்டுப்பாட்டுக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு டீசல் விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பை, எண்ணெய் நிறுவனங்களிடம் அளிக்கும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.

சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்துள்ள மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிப்பது. கலாச்சாரச் சீரழிவு, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள், கொலைகள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஆகியவற்றுக்குக் காரணமாக இருக்கும் மதுக்கடைகளை மூடுவதற்கும், முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்த மக்கள் ஆதரவைத் திரட்டவும், வைகோ அறிவித்து உள்ளபடி பிப்ரவரி 18 முதல் 28-ஆம் தேதி வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருபோரூர் ஒன்றியம் கோவளத்தில் தொடங்கி மறைமலை நகர் வரையிலும்,

ஏப்ரல் 16 முதல் 29-ம்தேதி வரை பொள்ளாச்சியில் தொடங்கி ஈரோடு வரையிலும், மூன்றாவது கட்டமாக ஜூன் மாத இறுதியில் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டத்திலும் மக்களைச் சந்தித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடைப்பயணங்களை வெற்றிகரமாக நடத்துவது. உங்கள் பணம் உங்கள் கையில் என்ற மோசடித் திட்டத்தைக் கைவிட வேண்டும்.

கூடங்குளம் அணு உலையை அகற்றக்கோரியும், அணு சக்தி எதிர்ப்பு மக்கள் இயக்கத்துக்கு முழுமையான ஆதரவு கொடுப்பது என்றும் பொதுக்குழு தீர்மானிக்கிறது. ஈழத் தமிழர்களை விடுவித்து, தங்கள் குடும்பத்துடன் திறந்தவெளி முகாம்களில் வாழ்ந்திட அனுமதிக்க வேண்டும். சிறப்பு முகாம்களை மூட வேண்டும். அணைகள் பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply