தமிழகத்துக்குள் நுழைய முயற்சி! வாட்டாள் நாகராஜ் கைது!

VATAl NAGARAJதமிழக எல்லையான தாளவாடிக்குள் நுழைய முயன்ற கன்னட சாலூவாலியா பட்சா அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜை கர்நாடகா போலீஸ் கைது செய்துள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடி தொட்டகஞ்சனூரில் டிவைன் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் சந்தியா மற்றும் குஷ்மு ஆகியோர் கடந்த 7-ந் தேதி பள்ளி முடிந்து வெளியேறினர். அப்போது பள்ளிக்கூட வளாகத்தில் டேவிட், லூர்து என்ற இருவரும் வாகனம் ஓட்டிப் பழகினர்.

 அவர்களது வாகனம் மாணவிகள் மீது மோதியதில் சந்தியா சம்பவ இடத்தில் பலியானார். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் வன்முறை வெடித்தது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் தாக்குதலுக்குள்ளாகின. இந்தத் தாக்குதலில் இருந்து காவல் நிலையம் மற்றும் மருத்துவமனையும் தப்பவில்லை. இதைத் தொடர்ந்து பள்ளி முதல்வர் சிவசங்கரன் உட்பட மொத்தம் 61 பேரை போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.

 கைது செய்யப்பட்டோரில் பெரும்பாலானோர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள். இவர்களை விடுவிக்கக் கோரி தமது அமைப்பின் சார்பில் தமிழக எல்லைப் பகுதியான தாளவாடியில் வாட்டாள் நாகராஜ் ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக அறிவித்திருந்தார். தாளவாடியில் கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என்று சத்தியமங்கலம் டி.எஸ்.பி., முத்துசாமி மற்றும் தாசில்தார் கண்ணப்பன் ஆகியோர் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்பினர்.

 இதை ஏற்று விசாரணை நடத்திய கோபி வட்டாட்சியர் பழனிச்சாமி, வாட்டாள் நாகராஜ் அமைப்பினர் தமிழக எல்லைக்குள் நுழைய ஒரு மாத கால தடை விதித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை தாளவாடி போலீசார் வாட்டாள் நாகராஜிடம் நேரிடையாக ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் தமது உத்தரவில் தெரிவித்திருந்தார். மேலும் அப்பகுதியில் 144 தடை உத்தரவும் போடப்பட்டது. இந்நிலையில் இன்று (02.02.2013) தாளவாடியில் தமிழக எல்லையான பார்வதிபுரம் அருகே தனது ஆதரவாளர்களுடன் வாட்டாள் நாகராஜ் தமிழகத்துக்குள் நுழைய தயாராக இருந்தார் அப்போது அங்கு கர்நாடக போலீசார் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோரை கைது செய்தனர்.

Leave a Reply