காசி தமிழ் சங்கமத்தில் இலக்கியம், கலாச்சாரம், விளையாட்டு மற்றும் இதர துறைகள் மூலம் இரு மாநில கலாச்சாரங்களும் ஒருங்கிணைந்துள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் கூறியுள்ளார்.
காசி தமிழ் சங்கமத்தில் எட்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளின் ஒரு பகுதியாக இன்று நட்பு ரீதியான டேபிள் டென்னிஸ் போட்டியை அவர் தொடங்கி வைத்தார்.
வாரணாசியில் சிக்ரா மைதானத்தின் மேம்பாட்டுப் பணியை திரு அனுராக் சிங் தாக்கூர் ஆய்வு செய்தார். மைதானத்தின் மேம்பாட்டு பணிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்களை அவர் பரிந்துரைத்தார். வாரணாசியில் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பல்வேறு அலுவலகங்களில் இடவசதியை முறைப்படுத்துதல் குறித்து அவர் ஆய்வு செய்தார். காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்று அவர் பிரார்த்தனை செய்தார்.
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பேசிய திரு அனுராக் சிங் தாக்கூர், இலக்கியம் மற்றும் கலாச்சாரம் தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் அங்கு நடைபெற்று வருவதாகவும், அதுபோன்ற முன்னெடுப்புகள் வடக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களை இணைப்பதாகவும் கூறினார். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளிடையேயான தொடர்பு நமது பழமையான பாரம்பரியத்தை பிரதிபலிப்பதாகவும் தெரிவித்தார்.
எம்.பிரபாகரன்
