இந்தியக் கடலோரக் காவல்படையினர் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கான கொள்கை சீர்திருத்தங்களை பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டார்.

இந்தியக் கடலோரக் காவல் படையில் அதிகாரிகளைப் பணியமர்த்துவது மற்றும் அவர்களுடைய பணி நிபந்தனைகளில் பாலின சமத்துவத்தைக் கடைபிடிப்பது, பணியின் போது கடலில் காணாமல் போகும் படையினரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கான நிர்வாக நடைமுறைகளைச் சீரமைப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட இரண்டு முக்கிய கொள்கைச் சீர்திருத்தங்களை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.

புதுதில்லியில் உள்ள கடமை மாளிகையில் 2026 ஜூலை 28 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறைச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், இந்தியக் கடலோரக் காவல்படை தலைமை இயக்குநர் திரு பரமேஷ் சிவமணி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியக் கடலோரக் காவல்படை சிறப்பாக சேவையாற்றியுள்ளதாகப் பாராட்டிய பாதுகாப்பு அமைச்சர், 2027-ம் ஆண்டு பொன்விழாவை நோக்கியுள்ள இப்படையின் மன உறுதியையும் செயல்திறனையும் தொலைநோக்குப் பார்வையிலான கொள்கைகள் மேலும் வலுப்படுத்தும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார். நவீன, திறன்மிக்க எதிர்காலத்திற்கு உகந்த கடல்சார் பாதுகாப்புப் படையாக இந்தியக் கடலோரக் காவல் படையை வலுப்படுத்துவதில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் உறுதிமிக்க நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

முதலாவது கொள்கை வழிகாட்டுதல் என்பது இந்தியக் கடலோரக் காவல் படையின் அதிகாரிகளை பணியமர்த்துவதற்கான பாலின வேறுபாடு இல்லாத கட்டமைப்பை அறிமுகப்படுத்துவதாகும். இதன் மூலம் மகளிரை மையமாகக் கொண்ட விரிவான அணுகுமுறை உருவாக்கப்படுகிறது. ஆண் அதிகாரிகளுக்கு இணையான நிலையில் பெண் அதிகாரிகளையும் குறுகிய கால பணி நியமனம், நிரந்தர பணி நியமனம் ஆகிய இரண்டிலும் சேர்ப்பது அடங்கும். குறுகிய கால பணி நியமன முறை தற்போது ஆண்களுக்கும் உருவாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply