டோகோ நாட்டின் தலைநகர் லோமேவில் நவம்பர் 27 முதல் டிசம்பர் 13, 2026 வரை நடைபெறும் 21-வது லோமே சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் (Foire Internationale de Lomé – FIL), இந்தியா கௌரவ விருந்தினர் நாடாகப் பங்கேற்கிறது. இதன் மூலம் டோகோ மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுடனான வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இந்தியா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
டோகோவின் பொருளாதாரம் மற்றும் மூலோபாய கண்காணிப்புத் துறை அமைச்சர் பதானம் படோகி (Badanam Patoki) நவம்பர் 27-ஆம் தேதி இக்கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். “ஆப்பிரிக்காவின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு மையமாக லோமே” (Lomé, Hub of Trade and Investment in Africa) என்ற கருப்பொருளில் நடைபெறும் இக்கண்காட்சியில், சுமார் 20 நாடுகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
இக்கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள இந்திய அரங்கில், இந்தியாவின் உற்பத்தித் திறன், தொழில்நுட்ப வளர்ச்சி, தரமான பொருட்கள் மற்றும் சேவைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வேளாண்மை மற்றும் உணவுப் பதப்படுத்துதல், மருந்துத் தயாரிப்பு, சுகாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பொறியியல், ஜவுளி, உற்பத்தித் தொழில் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய துறைகள் இடம்பெற்றுள்ளன.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமும் (APEDA) இக்கண்காட்சியில் பங்கேற்றுள்ளது. இந்தியாவின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை டோகோ மற்றும் மேற்கு ஆப்பிரிக்கச் சந்தைகளில் அறிமுகப்படுத்துவதுடன், புதிய வர்த்தக வாய்ப்புகள் மற்றும் தொழில் கூட்டாண்மைகளை உருவாக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
நவம்பர் 28-ஆம் தேதி இந்திய தினம் கொண்டாடப்பட்டது. இதில் இந்தியாவின் பொருளாதார வலிமை, தொழில்துறை வளர்ச்சி, பல்வேறு தயாரிப்புகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் டோகோ நாட்டு வர்த்தகத் துறையினர் மற்றும் சர்வதேசப் பிரதிநிதிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டன. மேலும், இந்திய மற்றும் டோகோ நிறுவனங்களுக்கு இடையே நேரடி வர்த்தகக் கலந்துரையாடல்கள் (B2B) மற்றும் வணிகத் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டன.
இந்தியா மற்றும் டோகோ நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் 2025–26 நிதியாண்டில் 3.36 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது 2024–25 நிதியாண்டில் 3.45 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. 2025–26 நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 2.51 பில்லியன் அமெரிக்க டாலராகவும், டோகோவிலிருந்து இந்தியாவின் இறக்குமதி 851.27 மில்லியன் அமெரிக்க டாலராகவும் பதிவாகியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான சந்தை அணுகல், வர்த்தகத் தொடர்புகள் மற்றும் பல்வேறு துறைசார் ஒத்துழைப்புகள் மூலம் வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இக்கண்காட்சியின் ஒரு பகுதியாக, மத்திய வர்த்தகத் துறையின் இணைச் செயலாளர் அமித் குமார், டோகோவின் பொருளாதாரம் மற்றும் மூலோபாய கண்காணிப்புத் துறை அமைச்சர் பதானம் படோகியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், தொழில் கூட்டாண்மைகளை உருவாக்குதல், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரித்தல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
டோகோவின் ஏற்றுமதிகளுக்கான மிகப்பெரிய சந்தையாக இந்தியா விளங்குவதைச் சுட்டிக்காட்டிய அமித் குமார், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பொருட்களின் வகைகளைப் பல்வகைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், முந்திரி, சோயாபீன் மற்றும் ஷியா பொருட்களைப் பதப்படுத்தும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குத் தேவையான குறைந்த செலவிலான இந்திய இயந்திரங்கள் கிடைப்பதை எடுத்துரைத்தார். வர்த்தகக் கொள்கைகளில் நிலையான தன்மை மற்றும் முன்கூட்டிய தெளிவு இருந்தால், டோகோவில் உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலைகளை அமைப்பதில் இந்திய நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதாரக் கூட்டமைப்பு (ECOWAS) மற்றும் சஹேல் பிராந்தியச் சந்தைகளுக்கான நுழைவாயிலாக லோமே விளங்குகிறது. இந்நிலையில், 21-வது லோமே சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் இந்தியா கௌரவ விருந்தினர் நாடாகப் பங்கேற்பது, ஆப்பிரிக்க நாடுகளுடனான இந்தியாவின் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
டிசம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சி, இந்திய மற்றும் டோகோ நிறுவனங்கள் புதிய வர்த்தக வாய்ப்புகளை ஆராயவும், நீண்டகாலத் தொழில் கூட்டாண்மைகளை உருவாக்கவும் சிறந்த தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திவாஹர்
