பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் உலகின் முன்னணி மையமாக டிஐஏடி உருவாக வேண்டும்!– மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.

புனேவில் உள்ள  மேம்பட்ட பாதுகாப்புத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான டிஐஏடி-ன் 15-வது பட்டமளிப்பு விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு உரையாற்றினார். பாதுகாப்புத் தொழில்நுட்ப ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றில் உலகத் தரம் வாய்ந்த மையமாக இந்த நிறுவனம் திகழ வேண்டும் என்று அவர் கூறினார்.

செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், குவாண்டம் கணினி, தானியங்கி அமைப்புகள், இணையப் பாதுகாப்பு, விண்வெளித் தொழில்நுட்பம் போன்றவை போர்முறையை மாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார். புதிய தொழில்நுட்பங்களை விரைவாக உருவாக்குவதுடன், அவற்றை நாட்டின் பாதுகாப்புத் தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

ராணுவ வலிமையும் அறிவியல் தொழில்நுட்பத் திறனும் நாட்டின் வலிமைக்கு முக்கியத் தூண்கள் என்று அவர் தெரிவித்தார். ராணுவ ஆராய்ச்சியில் உருவாகும் தொழில்நுட்பங்கள் மருத்துவம், விவசாயம், தகவல் தொடர்பு, போக்குவரத்து போன்ற பொதுமக்கள் பயன்பாட்டுத் துறைகளுக்கும் உதவும் என்று அவர் கூறினார்.

இந்தியாவை 2047-க்குள் வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் இலக்கில் டிஐஏடி முக்கியப் பங்காற்ற வேண்டும் என்றும், சர்வதேசப் பல்கலைக்கழகங்கள், தொழில்துறை ஆகியவற்றுடன் ஆராய்ச்சி ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த விழாவில் 518 மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. அவர்களில் 27 பேர் முனைவர் பட்டம், ஒருவர் ஆராய்ச்சி அடிப்படையிலான எம்.எஸ். பட்டம், 401 பேர் எம்.டெக். பட்டம், 89 பேர் எம்.எஸ்சி. பட்டம் பெற்றனர். இது இந்த நிறுவனத்தின் வரலாற்றில் ஒரே விழாவில் வழங்கப்பட்ட அதிகபட்சப் பட்டங்களாகும்.

Leave a Reply