மேற்கு வங்கத்தில் உள்ள காக்த்விப் – கங்காசாகர் இடையே புதிய ரயில் பாதை அமைப்பதற்கான இறுதிக்கட்ட இட ஆய்வுக்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தப் புதிய ரயில் பாதை சுமார் 34 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். இதில் ஹூக்ளி ஆற்றின் குறுக்கே சுமார் 4.5 கிலோ மீட்டர் நீளத்தில் பிரம்மாண்ட ரயில் பாலம் அமைக்கப்பட உள்ளது. இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டதும், நாட்டின் மிக நீளமான ரயில் பாலங்களில் ஒன்றாக இது திகழும்.
இந்தத் திட்டம் கங்காசாகருக்கான ரயில் போக்குவரத்து வசதியைப் பெரிதும் மேம்படுத்தும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இதனால் பக்தர்கள், உள்ளூர் மக்கள், சுற்றுலாப் பயணிகள் எளிதாகப் பயணம் செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். சுற்றுலா வளர்ச்சி, உள்ளூர் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்கும் இத்திட்டம் உதவும் என்று அவர் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் கங்கை ஆறு வங்காள விரிகுடாவில் கலக்கும் சாகர் தீவில் கங்காசாகர் அமைந்துள்ளது. இங்குள்ள சாகர் சங்கமத்தில் புனித நீராடுவதற்காக ஆண்டுதோறும் மகர சங்கராந்தி விழாவின்போது ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இங்குள்ள கபில் முனி கோயிலும் முக்கிய ஆன்மிக ஸ்தலமாக விளங்குகிறது.
தற்போது கங்காசாகர் செல்ல, முரிகங்கா ஆற்றைக் கடக்க படகுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும். அதன்பிறகு சாலை வழியாகப் பயணிக்க வேண்டும். புதிய ரயில் பாதை அமைந்தால் போக்குவரத்து எளிதாகும்
எம்.பிரபாகரன்
