இந்தியக் கடற்படையின் அதி நவீன வசதிகளுடன் கூடிய கப்பல் கட்டுமானத் திட்டத்தின் கீழ், உருவாக்கப்பட்டு வரும் முதலாவது போர் கப்பலுக்கான அடித்தளம் அமைக்கும் விழா, கொச்சியில் உள்ள கொச்சி கப்பல் கட்டுமானத் தளத்தில் 2026 செப்டம்பர் 18 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், போர்க்கப்பல் உற்பத்தி, கொள்முதல் பிரிவின் கட்டுப்பாட்டாளர் வைஸ் அட்மிரல் சஞ்சய் சாது சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்தியக் கடற்படை, கொச்சி கப்பல் கட்டுமான நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர். ஏவுகணைகளை செலுத்தும் அதிநவீன வசதிகளுடன் கூடிய போர் கப்பல்களை கட்டமைப்பதற்கான ஒப்பந்தம் கொச்சி கப்பல் கட்டுமான நிறுவனத்துடன் 2023 மார்ச் மாதம் கையெழுத்தானது.
இந்தக் கப்பல்கள் அதிநவீன ஆயுதங்கள், தொலையுணர் கருவிகளுடன் வடிவமைக்கப்படவுள்ளன. இவை இந்தியக் கடற்படையை எதிர்காலத் தேவைக்கேற்பவும், போர் புரிவதற்குத் தயாராகவும் உள்ள ஒரு வலிமையான சக்தியாக மாற்றி, அதன் போர் திறன்களைக் கணிசமாக மேம்படுத்தும்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில், சிக்கலான கடல்சார் சூழலில் செயல்படக்கூடிய வல்லமையுடன், நவீன கடற்படையை உருவாக்குவதில் இந்தியா கொண்டுள்ள உறுதியான நிலைப்பாட்டை இந்தக் கப்பல் கட்டுமான நடவடிக்கைகள் மேலும் வலுவடையச் செய்கிறது.
இத்திட்டம் பாதுகாப்புத் துறையின் வளர்ந்து வரும் உள்நாட்டுத் திறன்களையும் எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளது.ஏனெனில், கப்பலின் முக்கிய செயல்பாடுகளைத் தீர்மானிக்கும் அனைத்து உபகரணங்களும், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுத் தயாரிக்கப்படுகின்றன. இது மத்திய அரசின் தற்சார்பு இந்தியா, இந்தியாவில் உற்பத்தி செய்வோம், உலகிற்காகத் தயாரிப்போம் போன்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப அமைந்துள்ளது.
திவாஹர்
