சுரங்கம் மற்றும் உலோகத் துறைகளில் தொழில்நுட்பத்தால் உந்தப்பட்ட போட்டி நன்மையை இந்தியா நாடுகிறது. மேலும், புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கம் முதல் பதப்படுத்துதல், தளவாடங்கள், மறுசுழற்சி மற்றும் கீழ்நிலை உற்பத்தி வரையிலான முழு மதிப்புச் சங்கிலியிலும் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து, வள நன்மையில் இருந்து தொழில்நுட்பத்தால் உந்தப்பட்ட போட்டித்திறனுக்கு மாற வேண்டும் என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறைக்கான (தனிப் பொறுப்பு) மத்திய இணை அமைச்சரும், பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுக் குறைகள், ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று தெரிவித்தார்.
இத்துறையின் போட்டித்திறன், எவ்வளவு கனிமங்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன அல்லது உலோகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதை மட்டும் சார்ந்திருக்காது; மாறாக, இந்தியா தனது புவியியல் வளங்களை எவ்வளவு திறமையாகவும், பாதுகாப்பாகவும், நீடித்த நிலைத்தன்மையுடனும், புத்திசாலித்தனமாகவும் உயர் மதிப்புள்ள, மீள்திறன் கொண்ட மற்றும் சுழற்சி முறையிலான மூலப்பொருள் விநியோகச் சங்கிலிகளாக மாற்றுகிறது என்பதைப் பொறுத்தே அமையும் என்று அவர் கூறினார். இத்துறையைத் தொழில்துறை அளவில் மாற்றியமைக்கக்கூடிய, தனித்தனி தொழில்நுட்ப முன்னோட்டங்களைத் தாண்டி, ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட, விரிவாக்கக்கூடிய மற்றும் நம்பகமான தொழில்நுட்ப அமைப்புகளை நோக்கி நகர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
புது தில்லியில் உள்ள FICCI ஃபெடரேஷன் ஹவுஸில் நடைபெற்ற, “சுரங்கம் மற்றும் உலோகத் துறையில் டிஜிட்டல்மயமாக்கல், செயற்கை நுண்ணறிவு, தானியக்கம் மற்றும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு: இத்துறையின் போட்டித்திறனை மேம்படுத்துதல்” என்ற தலைப்பிலான FICCI மாநாட்டின் 3வது பதிப்பின் தொடக்க அமர்வில் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு, இந்தியாவின் கனிம அடிப்படையிலான தொழில்கள் முழுவதும் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது குறித்து விவாதிப்பதற்காக, கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள், தொழில்நுட்ப வழங்குநர்கள், புத்தொழில் நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சர்வதேச கூட்டாளர்களை ஒன்றிணைக்கிறது. இந்தியாவில் உள்ள KPMG இந்த மாநாட்டின் அறிவுசார் கூட்டாளராக உள்ளது.
உள்கட்டமைப்பு மேம்பாடு, எரிசக்தி மாற்றம், உற்பத்தி வளர்ச்சி, தற்சார்பு மற்றும் பொருளாதாரப் போட்டித்திறன் ஆகியவற்றில் மையப் பங்காற்றும் இந்தியாவின் சுரங்கம் மற்றும் உலோகத் துறை, ‘விக்ஷித் பாரத் @ 2047’ இலக்கை நோக்கி நாடு முன்னேறி வரும் நிலையில், ஒரு திருப்புமுனையான கட்டத்தை எட்டியுள்ளதாக அமைச்சர் கூறினார். உள்கட்டமைப்பு, உள்நாட்டு உற்பத்தி, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, புத்தாக்கம் மற்றும் முதலீடு ஆகியவற்றின் ஆதரவுடன் கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட நாட்டின் வளர்ச்சியானது, முக்கியத் துறைகள் முழுவதும் தொழில்நுட்பம் சார்ந்த விரிவாக்கத்திற்குத் தேவையான அளவையும் திறன்களையும் உருவாக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
திவாஹர்
