கப்பல்களை மறுசுழற்சி செய்வதன் மூலம் பெறப்படும் எஃகின் பயன்பாடு குறித்து விவாதித்து ஆய்வு செய்வதற்காக, எஃகு மற்றும் கனரகத் தொழில்துறை அமைச்சர் எச்.டி. குமாரசாமி மற்றும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சர் சர்பானந்த சோனோவால் ஆகியோரின் தலைமையில் ஒரு கூட்டுக் கூட்டம் நடைபெற்றது.
தற்போதுள்ள ஒழுங்குமுறை கட்டமைப்பை ஆய்வு செய்வதற்கும், கப்பல் மறுசுழற்சியிலிருந்து பெறப்படும் இரண்டாம் நிலை எஃகைப் பயன்படுத்துவதற்கான வழிகளை ஆராய்வதற்கும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST), இந்தியத் தர நிர்ணய அமைப்பு (BIS), குஜராத் கடல்சார் வாரியம் (GMB) மற்றும் கப்பல் மறுசுழற்சித் தொழில்கள் சங்கம் (SRIA) உள்ளிட்ட முக்கியப் பங்குதாரர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கப்பல் மறுசுழற்சியிலிருந்து மதிப்பு உருவாக்கத்தை மேம்படுத்துவதையும், உலகின் முன்னணி கப்பல் மறுசுழற்சி மையமாக இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, மறுசுழற்சி செய்யப்பட்ட கப்பல் எஃகின் பயன்பாட்டைக் கூடுதல் துறைகளுக்கு விரிவுபடுத்துவதை மையமாகக் கொண்டு இந்தக் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.
வட்டப் பொருளாதார நடைமுறைகளை ஊக்குவிப்பதற்கும், உள்நாட்டு எஃகு உற்பத்தியை ஆதரிப்பதற்கும், இந்தியாவின் கப்பல் மறுசுழற்சித் தொழில் நிலைத்தன்மை மற்றும் செயல்திறனில் உலகளாவிய அளவுகோல்களைத் தொடர்ந்து அமைப்பதை உறுதி செய்வதற்கும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இந்தக் கூட்டம் அடிக்கோடிட்டுக் காட்டியது.
திவாஹர்
