பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்வதற்கு இந்தியா விதித்துள்ள தடையை மீறும் முயற்சிகள் மீதான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ), பாகிஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட 362 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான உலர்ந்த பேரீச்சம்பழங்களைப் பறிமுதல் செய்துள்ளது.
உளவுத் தகவலின் அடிப்படையில் செயல்பட்ட டிஆர்ஐ அதிகாரிகள், நாசிக்கில் சோதனையிட்டனர். அப்போது மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட 13 கொள்கலன்களில் இருந்த உலர்ந்த பேரீச்சம்பழங்களை அவர்கள் பறிமுதல் செய்தனர். அந்த சரக்குகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜெபல் அலியிலிருந்து வந்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் அவற்றின் இறக்குமதி ஆவணங்களில் ஐக்கிய அரபு அமீரகமே மூல நாடாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
பொருட்களின் பாகிஸ்தான் மூலத்தை மறைக்கும் நோக்கில், கவனமாகத் திட்டமிடப்பட்டு இது நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய அரசு, தேசியப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, 2 மே 2025 தேதியிட்ட அறிவிப்பின் படி, பாகிஸ்தானில் இருந்து உற்பத்தி செய்யப்படும் அல்லது ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களின் நேரடி அல்லது மறைமுக இறக்குமதி அல்லது போக்குவரத்துக்கு 2 மே 2025 முதல் முழுமையான தடையை விதித்தது. இதையடுத்து, வருவாய் புலனாய்வு இயக்குநரகம், “ஆபரேஷன் டீப் மேனிஃபெஸ்ட்” என்ற நடவடிக்கையின் கீழ், மூன்றாம் நாட்டு வழித்தடம் வழியாக இந்தியாவிற்குள் இறக்குமதி செய்ய முயற்சிக்கப்படும் பாகிஸ்தான் நாட்டுப் பொருட்களைத் தொடர்ந்து அடையாளம் கண்டு, இடைமறித்து, பறிமுதல் செய்து வருகிறது.
எஸ்.சதிஸ் சர்மா
