இந்தியாவில் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு கடந்த பத்து ஆண்டுகளில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. 2014-ல் உச்ச நீதிமன்றம் 204 நிலக்கரிச் சுரங்கங்களை ரத்து செய்ததைத் தொடர்ந்து, இந்த ஒதுக்கீடு ஒரு வெளிப்படையான, விதிகள் அடிப்படையிலான செயல்முறைக்கு மாறியது. 2020 ஜூன் 18 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் வர்த்தக நிலக்கரிச் சுரங்க ஏலங்கள் தொடங்கப்பட்டது அடுத்த முக்கிய படியாக அமைந்தது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, இது சுரங்கத் துறையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கட்டமைப்பு சீர்திருத்தங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இதன் மூலம் கிடைக்கும் நன்மைகள், தொழில்துறை, அரசு கருவூலம், நிலக்கரி பயன்படுத்தும் சமூகங்கள் என அனைவருக்கும் வெளிப்படையாகப் பகிரப்படுகின்றன.
முழு செயல்முறையும் வெளிப்படையாக வைக்கப்பட்டுள்ளது. எம்எஸ்டிசி தளத்தில் இரண்டு கட்டங்களாக ஆன்லைனில் ஏலம் நடத்தப்படுகிறது. மேலும் ஏல ஆவணங்கள் ஏலதாரர்கள் முன்னிலையில் நேரடியாகத் திறக்கப்படுகின்றன. இறுதிப் பயன்பாட்டுக் கட்டுப்பாடு எதுவும் இல்லை. 100% அந்நிய நேரடி முதலீடுகள் தானியங்கி வழிமுறையின் மூலம் அனுமதிக்கப்படுகிறது. மேலும் முன்பண பரிவர்த்தனைகள் குறைவாகவும், எதிர்கால வருவாய்ப் பங்கிற்கு ஏற்ப சரிசெய்யக்கூடியதாகவும் வைக்கப்பட்டுள்ளன. இது சிறிய, புதிய நிறுவனங்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கிறது. இந்தக் கொள்கை பெரும் வெற்றி பெற்றுள்ளதால், இதுவரை 147 நிலக்கரிச் சுரங்கங்கள் ஏலம் விடப்பட்டுள்ளன. இதில் 44 புதிய நிறுவனங்கள் நிலக்கரிச் சுரங்கங்களை வென்றுள்ளன. இந்தக் கொள்கை தனியார் நிறுவனங்களை மட்டுமல்லாமல், பாரம்பரியமாக நிலக்கரியை உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்த கோல் இந்தியாவின் துணை நிறுவனங்களான வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட், நார்தர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் போன்ற பாரம்பரிய நிலக்கரி பொதுத்துறை நிறுவனங்களையும் ஈர்த்துள்ளது. சமீபத்திய ஏலச் சுற்றுகளில், தனியார் நிறுவனங்களைப் போலவே அதே நிபந்தனைகளின் கீழ் போட்டியிட்டு, சுரங்கத் தொகுதிகளுக்கான ஏலதாரர்களாக அவை களமிறங்கியுள்ளன.
2020 முதல், ஒன்பது மாநிலங்களில் 147 நிலக்கரித் தொகுதிகள் ஏலம் விடப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆண்டு வருவாயாக சுமார் ₹47,500 கோடியும், மூலதன முதலீடாக ₹55,000 கோடியும், 4.9 லட்சம் வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025-26-ம் நிதியாண்டில், ஒதுக்கீடு செய்யப்பட்ட வணிகச் சுரங்கங்களிலிருந்து ஈட்டப்பட்ட மொத்த வருவாய் சுமார் ₹3090 கோடியாக இருந்தது.
இவை அனைத்தும் சேர்ந்து, வணிக நிலக்கரிச் சுரங்க ஏல முறையை மாநிலங்கள், தொழில்துறை, உள்ளூர் சமூகங்கள் ஆகிய அனைவருக்கும் ஒரு உண்மையான வெற்றி வாய்ப்பாக ஆக்குகின்றன.
திவாஹர்
