அமெரிக்காவில் நடைபெற்ற ஜி20 எரிசக்தி வளம் சார்ந்த அமைச்சர்கள் கூட்டத்தில், பாதுகாப்பான, மலிவான மற்றும் நம்பகமான எரிசக்திக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

மத்திய மின்சாரம் மற்றும் வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு மனோகர் லால், அமெரிக்காவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ், 2026 செப்டம்பர் 14 முதல் 16 வரை அமெரிக்காவின் ஹூஸ்டனில் நடைபெற்ற ஜி20 எரிசக்தி செழிப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியக் குழுவிற்குத் தலைமை தாங்கினார். அவர், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மலிவு விலை அடிப்படைச் சுமை; அனுமதி மற்றும் ஒழுங்குமுறைத் திறன்; மற்றும் முக்கிய கனிமங்கள் & மீள்திறன் கொண்ட விநியோகச் சங்கிலிகள் ஆகிய மூன்று கருப்பொருள் தூண்களை மையமாகக் கொண்ட கலந்துரையாடல்களில் பங்கேற்றார்.

தனது உரையின்போது, ​​வளர்ச்சிக்கு, குறிப்பாக வளரும் பொருளாதாரங்களுக்கு, பாதுகாப்பான, மலிவான மற்றும் நம்பகமான எரிசக்தி இன்றியமையாதது என்று மத்திய அமைச்சர் வலியுறுத்தினார். பல்வேறு தேசிய சூழ்நிலைகளையும் வளர்ச்சி முன்னுரிமைகளையும் மதித்து, அனைவரின் பொது நலனை மேம்படுத்துவதற்காக சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும், நாடுகளுக்கு இடையேயான நிரப்புத்தன்மைகளைப் பயன்படுத்திக் கொள்வதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இந்தியா, டிஜிட்டல் மயமாகி வரும், பரவலாக்கப்பட்ட மற்றும் நுகர்வோரை மையமாகக் கொண்ட, மீள்திறன் மிக்க மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான ஒரு எரிசக்தி அமைப்பை உருவாக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும், மின்சாரத் துறையில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்; நிறுவப்பட்ட மின்சார உற்பத்தித் திறன் 552 ஜிகாவாட்டை எட்டியுள்ளது, இதில் பாதிக்கும் மேற்பட்டவை புதைபடிவ எரிபொருள் அல்லாத மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன. முக்கிய தேசிய பங்களிப்பு (NDC) இலக்குகளை இந்தியா முன்கூட்டியே அடைந்திருப்பதையும், 2070-ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜியத்தை அடையும் அதன் நீண்டகால இலக்கையும் அவர் மேலும் எடுத்துரைத்தார்.

ஒழுங்குமுறைத் திறனை வலுப்படுத்தவும், போட்டியை ஊக்குவிக்கவும், எரிசக்தித் துறை முழுவதும் அதிக பங்கேற்பு மற்றும் முதலீட்டை எளிதாக்கவும் இந்தியா மேற்கொண்டுள்ள பல்வேறு சீர்திருத்தங்களை அமைச்சர் எடுத்துரைத்தார். உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான ஒப்புதல்களை முன்கூட்டியே கணிக்கவும் நெறிப்படுத்தவும் உதவியுள்ள தேசிய ஒற்றைச் சாளர அமைப்பு, பரிவேஷ் மற்றும் பிரதமர் கதி சக்தி போன்ற முன்முயற்சிகளை அவர் விளக்கினார்.

முக்கிய கனிமங்கள் குறித்துப் பேசிய அமைச்சர், பாதுகாப்பான, மீள்திறன் கொண்ட மற்றும் பல்வகைப்படுத்தப்பட்ட விநியோகச் சங்கிலிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும், வளரும் நாடுகளில் சுழற்சிப் பொருளாதாரம் மற்றும் கீழ்நிலை மதிப்பு உருவாக்கத்தையும் அவர் வலியுறுத்தினார். கனிம ஆய்வு முதல் மறுசுழற்சி வரையிலான மதிப்புச் சங்கிலியை உள்ளடக்கிய இந்தியாவின் தேசிய முக்கிய கனிமங்கள் திட்டத்தையும் அவர் எடுத்துரைத்தார். அத்துடன், மறுசுழற்சி, மீட்டெடுப்பு மற்றும் பல்வகைப்படுத்தல் ஆகியவற்றில் ஜி20 ஒத்துழைப்புக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

Leave a Reply