தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் செப்டம்பர் 28-ம் தேதி தொடங்கி வைக்கவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத் தொடக்கம் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் இன்று (செப்.18) தலைமைச் செயலகத்தில் நடந்தது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசு தாய் – சேய் நலனை மேம்படுத்துவதற்கு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது.
கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி, இலவச பிரசவம் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தை பராமரிப்பு சேவைகள், அவசர மகப்பேறு சிகிச்சை, ஊட்டச்சத்து அளித்தல், பிரசவத்துக்காக மருத்துவமனையைத் திட்டமிடும் முறை, கர்ப்பிணி மற்றும் குழந்தைகள் கூட்டுக் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு மென்பொருள் (PICME) உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு மாநிலத்தில் தாய் – சேய் நலக் குறியீடுகள் குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
கே.பி.சுகுமார்
