பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் இன்று காலை சேவா தீர்த்தத்தில் முன்னணி தலைமைச் செயல் அதிகாரிகளுடன் நடைபெற்ற குறைக்கடத்தி வட்டமேசை மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார்.
கூட்டத்தின் போது, இந்தியாவின் தொழில்நுட்ப எதிர்காலத்தை வடிவமைப்பதில் அரசாங்கத்திற்கும் குறைக்கடத்தித் தொழில்துறைக்கும் இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார். இந்தியாவின் வலுவான திறமை, தொழில்நுட்பத் தழுவல் மற்றும் உள்கட்டமைப்பு அடித்தளத்தை அவர் எடுத்துரைத்ததோடு, திறன் மேம்பாடு, புத்தாக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI), குவாண்டம் கம்ப்யூட்டிங் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் தொழில்துறையின் அதிகப்படியான பங்களிப்பிற்கு அழைப்பு விடுத்தார். செயற்கை நுண்ணறிவில் ஒரு கோடி பேருக்குப் பயிற்சி அளிக்கும் இலக்கைக் குறிப்பிட்ட அவர், இந்தியாவின் திறமைசாலிகள், உலகளாவிய தொழில்துறைத் தலைவர்களின் அனுபவம் மற்றும் திறன்களுடன் இணையும்போது, குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று கூறினார்.
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் முன்னோடிகளில் ஒன்றாகத் திகழ இந்தியா இலக்கு கொள்ள வேண்டும் என்று பிரதமர் கூறினார். குறைக்கடத்தித் துறையில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிப்பிட்ட அவர், இந்தச் சூழலமைப்பு தற்போது அடித்தள முயற்சிகளிலிருந்து, பெரும் அளவிலான மற்றும் வாய்ப்புகள் நிறைந்த ஒரு கட்டத்தை நோக்கி நகர்கிறது என்றும் குறிப்பிட்டார்.
கணிக்கக்கூடிய மற்றும் பதிலளிக்கக்கூடிய கொள்கைச் சூழலை உருவாக்குவதில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டைப் பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். அதேவேளையில், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப கொள்கைகள் உருவாக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கொள்கை மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு தொழில்துறைத் தலைவர்களை அவர் அழைத்தார். மேலும், இத்துறையை மேலும் வலுப்படுத்துவதில் அவர்களின் கருத்துக்களுக்கு உரிய கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். இந்தியாவின் குறைக்கடத்தி வளர்ச்சியின் அடுத்த கட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்குமாறு அவர் தொழில்துறைத் தலைவர்களை ஊக்குவித்தார்.
உற்பத்தி, வடிவமைப்பு, உள்கட்டமைப்பு மற்றும் திறமை மேம்பாடு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் குறிப்பிட்ட தலைமைச் செயல் அதிகாரிகள், இந்தியாவின் குறைக்கடத்தித் திறன்களை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளைப் பாராட்டினர். ISM 2.0 திட்டத்தின் கீழ் உருவாகும் வாய்ப்புகள் மீதும், உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் துணைத் தொழில்கள் உள்ளிட்ட குறைக்கடத்தி மதிப்புச் சங்கிலி முழுவதும் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான இந்தியாவின் ஆற்றல் மீதும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
திவாஹர்
