இந்தியா-செஷெல்ஸ் நாடுகள் மீன்வளம், நீர்வாழ் உயிரின வளர்ப்பு, கடல் சார்ந்த பொருளாதாரத் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த முடிவு செய்துள்ளன. இதற்காக, 2026 ஆகஸ்ட் 25 அன்று இந்தியாவின் மீன்வளத் துறை சார்பில் இருதரப்பு உயர் மட்ட கூட்டம் நடைபெற்றது. இந்தியக் குழுவுக்கு மீன்வளத் துறை செயலாளர் டாக்டர் அபிலக்ஷ் லிகி தலைமை தாங்கினார். செஷெல்ஸ் குழுவுக்கு அந்நாட்டின் மீன்வளம், வேளாண்மை மற்றும் நீலப் பொருளாதார அமைச்சர் வாலஸ் காஸ்க்ரோவ் தலைமை வகித்தார்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் உணவுப் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த இரு நாடுகளுக்கும் இடையேயான நெருக்கமான ஒத்துழைப்பு முக்கியமானது என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்தியாவின் மீன் உற்பத்தி தற்போது 19.7 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளதாகவும், கடல் உணவுப் பொருட்களின் ஏற்றுமதி 8.46 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கடல் மீன் வளர்ப்பு, நவீன மீன் குஞ்சு உற்பத்தி நிலையங்கள், டூனா மீன்பிடி மேம்பாடு, மீன் வள மதிப்பீடு, மீன் பதனப்படுத்தும் தொழில்நுட்பம் மற்றும் கடல் பாதுகாப்பு போன்ற துறைகளில் இணைந்து செயல்பட இரு நாடுகளும் ஆர்வம் தெரிவித்தன. மேலும், மீன்வளத் தரவுகளை நிர்வகித்தல், கண்காணிப்பு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மீன்வளத் துறையில் தனிப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, ஆண்டுதோறும் செயல்திட்டங்களை வகுத்து செயல்பட செஷெல்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளது. தொழில்நுட்பப் பயிற்சிகள், நிபுணர் பரிமாற்றம் மற்றும் ஆய்வக வசதிகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் இரு நாடுகளின் கடல் வள வளர்ச்சியை நீண்டகால அடிப்படையில் மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
எஸ்.சதிஷ் சர்மா
