ஒடிசா மாநில தலபிராவில் உள்ள 2 நிலக்கரி சுரங்கங்கள் உற்பத்தியில் சாதனை படைத்துள்ளது.

உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி, எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நியமிக்கப்பட்ட ஆணைய கட்டமைப்பின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட அல்லது ஏலம் விடப்பட்ட நிலக்கரி சுரங்கங்கள் மூலம் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கென உருவாக்கப்பட்ட சிறப்புச் சட்டத்தின் கீழ், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தலபிராவில் உள்ள இரண்டு நிலக்கரி சுரங்கங்கள் உற்பத்தி, விநியோகம் தொழில்நுட்பப் பயன்பாடு, பாதுகாப்பு, சுற்றுச்சூழல், மேலாண்மை, வேலைவாய்ப்பு, சமூக மேம்பாடு உள்ளிட்ட அம்சங்களில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன. சம்பல்பூர், ஜார்சுகுடா மாவட்டங்களில் அமைந்துள்ள இந்த சுரங்கங்கள் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியில் முக்கிய பங்களிப்பை வழங்கும் சுரங்கங்களாக உருவெடுத்துள்ளது.

கடந்த நிதியாண்டில் இந்த சுரங்கங்களில் இருந்து 19.14 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 11.28 சதவீதம் கூடுதலாகும். இந்த சுரங்கங்கள் 2026 மார்ச் 21 அன்று 1,26,138.07 டன் என்ற மிக உயர்ந்த தினசரி உற்பத்தியை எட்டி சாதனை படைத்திருந்தது. இதேபோல 2026 மார்ச் மாதத்தில் 3.39 மில்லியன் டன் என்ற மாதாந்திர மிக அதிக உற்பத்தியை பதிவு செய்துள்ளன.

இந்த சுரங்கங்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட நிலக்கரியில் 10.72 மில்லியன் டன் மின்சாரத் துறைக்கும், 6.97 டன் ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்படாத துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு சுரங்கங்களில் இருந்து பெறப்படும் நிலக்கரி பல்வேறு மாநிலங்களில் உள்ள மின்உற்பத்தி நிலையங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

டார்லிபாலி, கதர்வாரா, கார்கோன், குட்கி ஆகிய இடங்களில் உள்ள தேசிய அனல்மின் உற்பத்திக் கழகங்கள், ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள பிற மின் உற்பத்தி நிலையங்களுக்கும் இங்கு உற்பத்தி செய்யப்படும் நிலக்கரி விநியோகிக்கப்பட்டு வருகிறது. 2026 ஆகஸ்ட் 14 வரை ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி 72.23 மெட்ரிக் டன்னாகவும், ஒட்டுமொத்த விநியோகம் 70.89 மெட்ரிக் டன்னாகவும் உள்ளது.

Leave a Reply