ஆசிரியர்கள் தினமான செப்டம்பர் 5 அன்று புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், உயர்கல்வி நிறுவனங்கள், தொழில்பயிற்சி நிறுவனங்களைச் சேர்ந்த 21 ஆசிரியர்களுக்கு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தேசிய விருதுகளை வழங்க உள்ளார்.
இந்த ஆண்டுக்கான விருதுகளுக்கு மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து 12 ஆசிரியர்களும், மாநில பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த (3 அரசு, 2 தனியார்) 5 ஆசிரியர்களும், தொழிற்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த (2 அரசு, 2 தனியார்) 4 ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
2026-ம் ஆண்டிற்கான தேசிய விருதுகளுக்கான பரிந்துரைகள் தேசிய விருது இணையதளம் வாயிலாக கோரப்பட்டது. இதற்கான பரிந்துரைகள் 2026 மே 26 முதல் ஜூலை 20 வரை பெறப்பட்டது.
சிறந்த ஆசிரியர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
கற்பித்தல் – கற்றல் திறன், சமூக செயல்பாடுகள், ஆராய்ச்சி, புதுமைக் கண்டுபிடிப்பு, நிதியுதவி மூலம் ஆராய்ச்சி, ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டங்கள், ஆலோசனைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் அவர்களுடைய செயல்பாடு மதிப்பீடு செய்யப்பட்டு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட 21 ஆசிரியர்களில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரைச் சேர்ந்த பிஎஸ்ஜி பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர் டாக்டர் எஸ் சசிகலாவும், ஈரோடு சக்தி பாலிடெக்னிக் கல்லூரியைச் (அரசு உதவி பெறும்) சேர்ந்த டாக்டர் கண்ணன் ரத்தினமும் இடம்பெற்றுள்ளனர்.
எம்.பிரபாகரன்
