குடிநீர்த் தொட்டிகள், வடிகட்டிகள் ஆகியவற்றைத் தூய்மைப்படுத்தி, கிருமி நீக்கம் செய்வதற்கான சிறப்பு இயக்கத்தை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது.

ரயில் நிலையங்களில் பயணிகளுக்குப் பாதுகாப்பான, தூய்மையான குடிநீர் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் குடிநீர்த் தொட்டிகள், வடிகட்டிகள் ஆகியவற்றைத் தூய்மைப்படுத்தி கிருமி நீக்கம் செய்வதில் கவனம் செலுத்தும் வகையில் ஒரு சிறப்புத் தூய்மைப்பணியை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது.

இந்திய ரயில்வே பகுதிகள் முழுவதும் குடிநீர்த் தர மேலாண்மையை வலுப்படுத்துவதற்கான செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடைசிக் கட்டத்தில் மட்டும் நீரின் தரத்தைப் பரிசோதனை செய்வதற்கு மாறாக நீர் கிடைக்கும் பகுதி, நுகர்வு இடம் ஆகிய பகுதிகளிலும் நீரின் தரத்தைப் பரிசோதிப்பதுடன், முழு குடிநீர் அமைப்பிலும் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு பராமரிப்பதன் முக்கியத்துவத்தை இந்தச் செயல்திட்டம் வலியுறுத்துகிறது.

இப்பணியின்போது, மண்டல ரயில்வே நிர்வாகங்கள் நீர் ஆதாரங்கள், சுத்திகரிப்பு, வடிகட்டும் நிலையங்கள், நிலத்தடி, மேல்நிலைத் தொட்டிகள், பிவிசி தொட்டிகள், குடிநீர் விநியோகிக்கும் பகுதிகள், குழாய்கள் ஆகியவற்றை முழுமையாக ஆய்வு மேற்கொள்ளும். அனைத்து குடிநீர்த் தொட்டிகளும் காலி செய்யப்பட்டு அவற்றிலுள்ள கழிவுகள் அகற்றப்பட்டு, தூய்மைப்படுத்தப்பட்டு கிருமி நீக்கம் செய்யப்படும். தொட்டிகளின் மூடிகள் இறுக்கமாக உள்ளதை உறுதி செய்வதுடன் காற்று வெளியேறும் துளைகள், உபரிநீர் வெளியேறும் பகுதிகள் ஆகியவற்றில் பறவைகள், விலங்குகள், பாசி ஆகியவற்றால் பாதிப்பு ஏற்படாதவாறு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்த நடவடிக்கை சரிசெய்யப்பட வேண்டிய குறைபாடுகளை கண்டறியும். சேதமடைந்த தொட்டிகள், குழாய்கள், வடிகட்டிகள் ஆகியவை பழுது பார்க்கப்படும் அல்லது மாற்றப்படும். அதேபோல் குடிநீர் இணைப்புக்கும், குடிநீர் அல்லாத நீர் இணைப்பிற்கும் இடையே எந்தவொரு குறுக்கு இணைப்பும் இல்லை என்பது உறுதி செய்யப்படும். குடிநீர் விநியோக அமைப்பிலுள்ள அனைத்து குழாய்களிலும் கசிவுகள் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டு நீர் வீணாவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

Leave a Reply