2015-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கடலோரக் காவல்படை ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இந்திய கடலோரக் காவல்படைக்கும் வியட்நாம் கடலோரக் காவல்படைக்கும் இடையேயான 7-வது உயர்மட்டக் நிலைக் கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 25, 2026) சென்னையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு இந்திய கடலோரக் காவல்படையின் தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி, வியட்நாம் கடலோரக் காவல்படையின் துணைத் தளபதி மேஜர் ஜெனரல் லுவோங் டின் ஹங் ஆகியோர் கூட்டாகத் தலைமை வகித்தனர்.
கடல்சார் தேடல், மீட்பு, கடல்சார் சட்ட அமலாக்கம், கடல் மாசுபாடு தடுப்பு, திறன் மேம்பாடு உள்ளிட்ட முக்கியத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இந்தக் கலந்துரையாடல்கள் கவனம் செலுத்தின. தொழில்முறைப் பரிமாற்றங்கள், கப்பல் வருகைகள் உள்ளிட்ட, இருதரப்பு ஈடுபாடுகளை இரு தரப்பினரும் ஆய்வுசெய்ததுடன், ஒத்துழைப்பையும், ஒருங்கிணைந்த செயல்பாட்டுத் திறனையும் மேம்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.
பரஸ்பர நம்பிக்கை, ஒருங்கிணைப்பு மற்றும் செயல்பாட்டு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக, வழக்கமான நிறுவன ரீதியான கலந்துரையாடல்கள், பயிற்சித் திட்டங்கள், தொழில்முறைப் பரிமாற்றங்கள், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்ளுதல் மற்றும் கப்பல் வருகைகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இரு கடலோரக் காவல் படைகளும் வலியுறுத்தின.
பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு, உறுதித்தன்மை, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக, நட்புணர்வுடன் இணைந்து செயல்படுவதற்கான உறுதிப்பாட்டை உயர் மட்டக் குழு மீண்டும் வலியுறுத்தியது.
இந்தியா-வியட்நாம் கடலோரக் காவல்படைகளின் கூட்டுப் பயிற்சியான சஹ்யோக்-ஹாப்டாக், நாளை (2026 ஆகஸ்ட் 27) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியானது, இரு கடலோரக் காவல்படைகளும், பரஸ்பர செயல்பாட்டுத் திறனை வலுப்படுத்தவும், சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்ளவும் சிறந்த வாய்ப்பை வழங்கும்.
எஸ்.சதிஸ் சர்மா
