பாதுகாப்புத் துறையில் தற்சார்பு இந்தியா என்னும் தொலைநோக்குப் பார்வையை அடையும் முக்கிய நடவடிக்கையாக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஒ) உருவாக்கிய அனைத்து ஏவுகணை அமைப்புகளின் தொழில்நுட்பங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்காக இந்தியப் பாதுகாப்புத் தளவாடத் தொழில்துறைக்கு மாற்ற பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். தகுதிகள், சான்றிதழ்கள், ஒழுங்குமுறைத் தேவைகளின்படி, உள்நாட்டு உற்பத்திக்காக உள்நாட்டு தொழில்துறையை அனுமதிப்பதன் மூலம் பாதுகாப்புத்துறை சூழலில் அவற்றின் பங்களிப்பை அதிகரிக்க இந்தத் தொழில்நுட்ப மாற்றம் முக்கிய மைல்கல்லாக உள்ளது.
இது, ஏவுகணை முறை மேம்பாட்டிலிருந்து தொழில்துறை உற்பத்திக்கு வெற்றிகரமாக மாறுவதை சாத்தியமாக்கும். அத்துடன், மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகளின் மேம்பாடு, உற்பத்திக்கு இந்திய தொழில்துறையின் திறன்களைப் பயன்படுத்த டிஆர்டிஒ-வின் தொடர்ச்சியான முயற்சிகளை இது பிரதிபலிக்கிறது. உள்நாட்டு உற்பத்தித் திறன்களை மேம்படுத்துதல், பாதுகாப்புத் துறைச் சார்ந்த தொழில்துறை அடித்தளத்தை வலுப்படுத்துதல், விநியோக முறையில் இந்திய குறு, சிறு, நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள், இதர தொழில்நுட்பக் கூட்டாளர்களின் பங்களிப்பிற்கான வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவைகள் இதன் நோக்கமாகும்.
நாட்டின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறையின் வளர்ச்சியை ஆதரிக்கும் அதே நேரத்தில், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துதல், இறக்குமதியைச் சார்ந்திருப்பதை குறைத்தல், உள்நாட்டு மதிப்புக் கூட்டலை அதிகரித்தல் ஆகியவையும் இதன் நோக்கமாகும். மேம்பட்ட பாதுகாப்புத் தொழில்நுட்பங்களின் பரிமாற்றத்திற்கும் உள்நாட்டு பாதுகாப்புத் திறன்களை மேலும் வலுப்படுத்துவதற்கும், இந்தியத் தொழில்துறையுடன் இணைந்து பணியாற்றுவதில் டிஆர்டிஒ தொடர்ந்து உறுதியாக உள்ளது.
எஸ்.சதிஸ் சர்மா
