மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் 200 பேர் கொண்ட வர்த்தகக் குழு ஜப்பானுக்குச் செல்கிறது.

மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், 2026 ஆகஸ்ட் 24 முதல் 27 வரை ஜப்பானின் டோக்கியோ, நகோயா, ஒசாகா நகரங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். உற்பத்தி, குறைக்கடத்திகள் (செமிகண்டக்டர்), தூய்மையான எரிசக்தி, எஃகு, வாகனத் துறை, நிதிச் சேவைகள், சுகாதாரப் புத்தொழில் நிறுவனங்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 200-க்கும் அதிகமான வணிகப் பிரதிநிதிகளைக் கொண்ட, மிகப்பெரிய வணிகக் குழு அவருடன் ஜப்பான் செல்கிறது.

டோக்கியோவில், திரு பியூஷ் கோயல், இந்தியாவின் வளர்ச்சிக்கு நீண்டகாலமாகப் பங்களித்து வரும் முக்கிய ஜப்பானியப் பெரு நிறுவனங்களின் உயர்நிலைத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவார். அத்துடன், 1,500-க்கும் மேற்பட்ட முன்னணி ஜப்பானிய நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உச்ச அமைப்பான கெய்டன்ரென் எனப்படும் ஜப்பான் வர்த்தகக் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் வட்டமேசை கூட்டத்திலும் அவர் பங்கேற்பார்.

மேலும், ஜப்பான், வர்த்தக தொழில்துறை அமைச்சர் திரு அகசாவா ரியோசேவுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் திரு பியூஷ் கோயல் பங்கேற்பதோடு, ஜப்பானிய அரசு, நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களையும் சந்திப்பார். இது தவிர, ஜப்பானில் உள்ள இந்திய சமூகத்தினருடனும் அவர் கலந்துரையாடவுள்ளார்.

மத்திய ஜப்பானின் தொழில் மையமான நகோயாவில், மத்திய ஜப்பான் பொருளாதாரக் கூட்டமைப்பு, நகோயா வர்த்தக தொழில் சபை ஆகியவற்றின் சார்பில் ஏற்பாடு செய்யப்படவுள்ள கலந்துரையாடல் நிகழ்வில் முக்கிய முதலீட்டாளர்களுடன் அமைச்சர் கலந்துரையாடவுள்ளார்.

ஒசாகாவில் ஜப்பானிய நிறுவன பிரதிநிதிகளுடனான சந்திப்புகளுடன், முதலீட்டாளர்கள், வணிகர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் திரு பியூஷ் கோயல் பங்கேற்பார்.

மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயலின் இந்த ஜப்பான் பயணம், இருதரப்பு வர்த்தகம், முதலீட்டு உறவுகளுக்குப் புதிய உத்வேகம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply