ஜிஆர்எஸ்இ, ஒய்ஐஎல் நிறுவனங்களின் ரூ.3,500 கோடி மதிப்பிலான ஐந்து விரிவாக்கத் திட்டங்களுக்குப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அடிக்கல் நாட்டினார்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மேற்கு வங்க முதலமைச்சர் திரு சுவேந்து அதிகாரி ஆகியோர் இணைந்து, கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மூன்று விரிவாக்கத் திட்டங்களுக்கும், யந்திரா இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் இரண்டு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினர். கொல்கத்தாவில் உள்ள ஜிஆர்எஸ்இ பவனிலிருந்து இன்று (ஆகஸ்ட் 23, 2026) காணொலி வாயிலாக அவர்கள் இந்தத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினர். சுமார் ரூ.3,500 கோடி மொத்த முதலீட்டில் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.

பாதுகாப்புத் துறை அமைச்சர் தமது உரையில், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் ‘தற்சார்பு இந்தியா’, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ ஆகிய தொலைநோக்குப் பார்வைகளை இந்தத் திட்டங்கள் மேலும் வலுப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார். நாம் ஒரு வளர்ந்த நாடாக உருவெடுக்கும்போது, பாதுகாப்புத் துறை முழுமையாகத் தன்னிறைவு அடைய வேண்டும் என்று அவர் கூறினார். நாம் வேறு எந்த நாட்டையும் சார்ந்திருக்க முடியாது எனவும், நமது சொந்த நிறுவனங்களும் ஆராய்ச்சி நிறுவனங்களும்தான் இத்துறையில் முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்தத் திட்டங்கள் பாதுகாப்பு உற்பத்தியை அதிகரிப்பது மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான மக்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளையும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் அது சார்ந்த தொழில் துறைகளுக்கு விரிவான வாய்ப்புகளையும் உருவாக்கும் என்று திரு ராஜ்நாத் சிங் மேலும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் திரு சுவேந்து அதிகாரி, இந்த விரிவாக்கத் திட்டங்கள் ஜிஆர்எஸ்இ, ஒய்ஐஎல் ஆகிய நிறுவனங்களின் தொழில் உற்பத்தித் திறன்களை மேம்படுத்துவதோடு, மேற்கு வங்கத்தின் தொழிற்துறை வளர்ச்சிக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மேற்கு வங்க அரசின் தலைமைச் செயலாளர் திரு மனோஜ் அகர்வால், பாதுகாப்பு உற்பத்தித் துறைச் செயலாளர் திரு சஞ்சீவ் குமார், ஜிஆர்எஸ்இ தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் கமாடோர் திரு பி.ஆர். ஹரி, ஒய்ஐஎல் தலைவர் திரு விஜய்குமார் ஐயர் மற்றும் இரு நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Leave a Reply