மொரீஷியஸ் நாட்டின் பொதுப்பணி, நிர்வாக சீர்திருத்தங்கள் துறை அமைச்சர் திரு லட்சுமண ராஜ் பெந்தியாவ், மத்திய இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங்கை புதுதில்லியில் இன்று சந்தித்துப் பேசினார்.
நல்லாட்சிக்கான தேசிய மையம் மூலம் 5 ஆண்டுகளில் 500 மொரீஷியஸ் அரசு அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டத்தின் கீழ், முதல்கட்ட அதிகாரிகள் முசூரியில் பயிற்சிப் பெற்று வருகின்றனர். ‘ஐகாட் கர்மயோகி மொரீஷியஸ்’ டிஜிட்டல் தளம் மூலம் அங்குள்ள அரசு ஊழியர்களுக்குத் தொடர் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவின் லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமி, ஐஐபிஏ, ஐஎஸ்டிஎம் மற்றும் மொரீஷியஸின் ‘அடல் பிஹாரி வஜ்பாய் பொதுப்பணி மற்றும் கண்டுபிடிப்பு நிறுவனம்’ ஆகியவை இணைந்து கூட்டு ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சிவில் சர்வீஸ் மட்டுமன்றி, நீலப் பொருளாதாரம், கடல்சார் தொழில்நுட்பங்கள், மீன்வளம் மற்றும் கடல்நீரை நன்னீராக்குதல் ஆகிய துறைகளிலும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை விரிவுபடுத்த இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைந்துள்ள மொரீஷியஸ் நாட்டின் இந்த ஒத்துழைப்பு, தென்னிந்தியாவின் கடல்சார் ஆராய்ச்சி மற்றும் நிர்வாகத் துறைகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.
திவாஹர்
