அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கத்தில் பயனுள்ள, வலுவான, எதிர்காலத்திற்கு ஏற்ற கட்டமைப்பை உருவாக்குவதற்கான பிரிக்ஸ் அமைப்பின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையில், சென்னை பிரகடனம் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அறிவித்தார்.
இந்தியாவின் தலைமையில் நடைபெற்ற 14-வது பிரிக்ஸ் அறிவியல்துறை அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தின் நிறைவு அமர்வில் உரையாற்றிய அவர், இதற்கான ஒத்துழைப்பு மக்களை மையமாகக் கொண்ட, மனிதாபிமான அடிப்படையிலான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் என்று கூறினார்.
இதில் நீடித்த வளர்ச்சி, வலுவான, உயர்தர மேம்பாடு, சமூக உள்ளடக்கம், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளை சேர்ந்த மக்களின் நலவாழ்வு, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, புத்தாக்கம், தொழில்நுட்பப் பயன்பாடு ஆகியவற்றிற்கு உயர் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அவர் கூறினார்.
மிகவும் வலிமையான, அனைவரையும் உள்ளடக்கிய, நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில், அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம் ஆகியவற்றின் பங்களிப்பை இந்த விவாதங்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு, உயர்-செயல்திறன் கொண்ட கணினித் தொழில்நுட்பம் முதல் குவாண்டம் தொழில்நுட்பங்கள், மேம்பட்ட பொருட்கள், உயிரித் தொழில்நுட்பம், சுகாதாரம், பருவநிலை, நிலைத்தன்மை வரை பல்வேறு அம்சங்கள் குறித்து நடைபெற்ற விரிவான விவாதங்கள், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலம் எதிர்கொள்ளக்கூடிய பொதுவான வாய்ப்புகள், சவால்களைப் பிரதிபலிப்பதாக உள்ளன என்று டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.
திவாஹர்
