ஆந்திரப் பிரதேசத்தில் நாட்டின் முதலாவது மரபணு மாற்றப்படாத அதிக விளைச்சல் தரும் பாப்கார்ன் மக்காச்சோள வீரியரக விதையை குடியரசு துணைத்தலைவர் அறிமுகம் செய்து வைத்தார்.

ஆந்திரப் பிரதேச மாநிலம் எலுரு மாவட்டம் முசுனுருவில் நாட்டின் முதலாவது மரபணு மாற்றப்படாத அதிக விளைச்சல் தரும் பாப்கார்ன் மக்காச்சோள வீரியரக விதையை குடியரசு துணைத்தலைவர் திரு சிபி ராதாகிருஷ்ணன் இன்று அறிமுகம் செய்துவைத்தார். இது வேளாண்மையில் தற்சார்பு இந்தியாவை நோக்கிய ஒரு சிறந்த படியாகும் என்று அவர் விவரித்தார்.

அத்துடன் ஆந்திரப் பிரதேசம் மற்றும் 7 இதர மாநிலங்களைச் சேர்ந்த சிறந்த விவசாயிகளையும் கவுர்மெட் பாப்கார்னிகாவுடன் தொடர்புடைய கூட்டாளர்களையும் அவர் பாராட்டினார்.

அப்போது உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு என்றும் வேளாண்மை நாட்டின் நாகரீக, கலாச்சார வாழ்க்கையை வடிவமைத்துள்ளதாகவும் தெரிவித்தார். இந்திய வேளாண்மையை வலுப்படுத்துவதில் தொழில்நுட்பம், புதுமைக் கண்டுபிடிப்பு, உள்நாட்டு விதை மேம்பாடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

இந்த விதை அறிமுகம் குறித்து குறிப்பிட்ட திரு சிபி ராதாகிருஷ்ணன், உயர்தர பாப்கார்ன் மக்காச்சோளத்திற்காக, இந்தியா பல ஆண்டுகளாக இறக்குமதி செய்யப்பட்ட வீரியரக தொழில்நுட்பத்தையே சார்ந்திருந்ததாக கூறினார். இந்தப் புதிய உள்நாட்டு வீரியரக விதை அதுபோன்ற சார்பு நிலையை தவிர்ப்பதற்கும், அந்நியச் செலாவணியை பாதுகாப்பதற்குமான ஒரு நடவடிக்கையை குறிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். இந்திய மண்ணில் விளைவிக்கப்பட்ட, உலகளாவிய சந்தைகளில் போட்டியிடக்கூடிய திறன்மிக்க இந்தியத் தீர்வை உருவாக்கியதற்காக கவுர்மெட் பாப்கார்னிகா நிறுவனத்தையும், விவசாயிகளையும் அவர் பாராட்டினார்.

Leave a Reply