தேசிய அரிவாள் வடிவ செல் ரத்தசோகை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள பரிசோதனைகளுக்கான இலக்குகளை திட்டமிட்ட காலத்திற்கு முன்னதாகவே எட்டப்பட்டுள்ளதற்கு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு மகிழ்ச்சித் தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் ஓம்காரேஷ்வரில் இன்று நடைபெற்ற சர்வதேச சிக்கிள்செல் தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்று பேசினார்.
சுகாதாரத்துறையில் அரிவாள் வடிவ செல் ரத்தசோகை பரி்சோதனையில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில், மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார். பச்சிளம் குழந்தை முதல் 40 வயது வரையிலான 7 கோடி பேருக்கு இந்த மரபணு நோய் பாதிப்புக் குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இத்தகைய மரபணு நோய் சார்ந்த பரிசோதனைகளுக்கான உலகின் மிகப் பெரிய முன்முயற்சிகளில் ஒன்றாக இது அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.
இத்திட்டத்தை மக்கள் இயக்கமாகக் கருதி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாகவே நாட்டில் இதுவரை இரண்டரை லட்சம் பேருக்கு ரத்தசோகை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சையை உறுதி செய்துள்ள மத்திய – மாநில அரசுகளுக்கு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு பாராட்டுத் தெரிவித்தார்.
திவாஹர்
