அறிவியல், தொழில்நுட்பம், விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், கொள்கை சீர்திருத்தங்கள், அதிகரித்து வரும் தனியார் பங்களிப்பு, வேகமாக விரிவடைந்து வரும் புத்தாக்கச் சூழலமைப்பு ஆகியவற்றால், இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் தற்போதைய 8 முதல் 9 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து அடுத்த பத்து ஆண்டுகளில் ஏறத்தாழ 40 முதல் 45 பில்லியன் அமெரிக்க டாலராக வளரத் தயாராக உள்ளது என்று கூறினார்.
புதுதில்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவின் விண்வெளித் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம், நாடு முழுவதும் நிகழும் ஒரு பெரிய மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது என்றும், அறிவியலும் தொழில்நுட்பமும் ஆய்வகங்களைத் தாண்டி தேசிய உணர்வின் ஒரு பகுதியாக மாறியுள்ளன என்றும் கூறினார். சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்ட மிக முக்கியமான சாதனைகளில் ஒன்று, அறிவியலுக்கும் சமூகத்திற்கும் இடையிலான தொடர்பு வளர்ந்து வருவதுதான் என்றும், மக்கள் தங்களை இந்தியாவின் அறிவியல் முன்னேற்றத்தில் பங்குதாரர்களாகக் கருதுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தூய்மை இந்தியா, டிஜிட்டல் இந்தியா, டிஜிட்டல் ஹெல்த், ஆழ்கடல் இயக்கம் மற்றும் ககன்யான் போன்ற திட்டங்கள், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் அறிவியலையும் புத்தாக்கத்தையும் நிலைநிறுத்த உதவியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். அறிவியல் – தொழில்நுட்ப நிகழ்வுகளில் பிரதான ஊடகங்களின் பங்கேற்பு அதிகரிப்பதே, அறிவியல் முன்னேற்றங்களில் பொதுமக்களின் ஆர்வம் வளர்ந்து வருவதைப் பிரதிபலிக்கிறது என்று அவர் தெரிவித்தார். சந்திரயான்-3 போன்ற திட்டங்கள், விண்வெளி அறிவியலை பரவலான பொது ஆர்வமுள்ள ஒரு பாடமாக மாற்றி, நாடு முழுவதும் உள்ள மக்களிடையே முன்னெப்போதும் இல்லாத விழிப்புணர்வையும் ஈடுபாட்டையும் உருவாக்கியுள்ளன என்று அவர் கூறினார்.
விண்வெளி, அணுசக்தி, மேம்பட்ட தொழில்நுட்பங்கள் போன்ற முன்னணித் துறைகளில் இந்தியாவின் வளர்ந்து வரும் திறன்கள், நாட்டின் உலகளாவிய நிலையை வலுப்படுத்தியுள்ளன என்று அமைச்சர் கூறினார். இந்தச் சாதனைகளால் ஏற்பட்ட நம்பிக்கை, உள்நாட்டுத் தொழில்நுட்பங்களின் நம்பகத்தன்மையை மேம்படுத்தி, நம்பகமான தொழில்நுட்பப் நாடாக இந்தியாவின் நிலையை வலுப்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் அறிவியல் சாதனைகள், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்பத் தன்னிறைவு மற்றும் உலகளாவிய போட்டித்திறன் ஆகியவற்றிற்குப் பெருமளவு பங்களித்து வருகின்றன என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
திவாஹர்
