நாக்பூர் மாவட்டம் முழுவதும் 25 லட்சம் மரக்கன்றுகளை நடுவதன் மூலம், பசுமை நகரமாக மாற்றுவதற்கான உறுதியான நிலைப்பாட்டை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி மீண்டும் வலியுறுத்தினார். “தாயின் பெயரில் மரக்கன்று நடும்” திட்டத்தின் கீழ், மக்கள் இயக்கமாக மரக்கன்று நடுதல், பராமரித்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், தன்னார்வ அமைப்புகள், அரசியல் கட்சிகள், பிற அமைப்புக்களுக்கு 2 முதல் 3 மீட்டர் உயரம் கொண்ட மரக்கன்றுகள் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
மத்திய அரசின் கடந்த 12 ஆண்டுகால சாதனைகள், வளர்ச்சித் திட்டப் பணிகளை எடுத்துரைக்கும் வகையில், நாக்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் திரு. கட்கரி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மகாராஷ்டிர மாநில வருவாய்த் துறை அமைச்சரும் நாக்பூர் மாவட்டப் பொறுப்பு அமைச்சருமான திரு. சந்திரசேகர் பாவன்குலே, உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வருவாய் மற்றும் வனத்துறையின் ஆதரவுடனும், நாக்பூரில் அமைந்துள்ள தொலையுணர்வு மையத்தின் மூலமாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கள், தாலுகாக்களின் வரைபடமாக்கல் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார். விரிவான அளவில் மரம் நடும் பணிகளை மேற்கொண்ட மாவட்டங்கள் குறித்த தகவல்கள் ஆவணப்படுத்தப்படும் என்றும், அத்தகைய மாவட்டங்கள் அவற்றின் பங்களிப்பிற்காக அங்கீகரிக்கப்படும் என்றும் திரு. நிதின் கட்கரி குறிப்பிட்டார்.
எஸ்.சதிஸ் சர்மா
