இந்திய ரயில்வே, மே 2025-ஐ விட 1.3 சதவீதம் அதிகரித்து, மே 2026-இல் 145 மில்லியன் டன் சரக்குகளை ஏற்றி, தனது சரக்கு போக்குவரத்து வளர்ச்சி வேகத்தைத் தக்கவைத்துக் கொண்டது. இரும்புத் தாது, எஃகு, உரங்கள் மற்றும் மீதமுள்ள இதர பொருட்கள் பிரிவுகளில் ஏற்பட்ட வலுவான செயல்திறனே இந்த வளர்ச்சிக்கு வழிவகுத்தது.
மேற்கு ஆசியாவில் நிலவும் புவிசார் அரசியல் சூழல் மற்றும் அதன் மறைமுகத் தாக்கத்தால் சரக்குப் போக்குவரத்து மற்றும் விநியோகச் சங்கிலிகளில் ஏற்பட்ட சவால்களையும் மீறி, சரக்கு ஏற்றும் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான செயல்பாட்டுக் கண்காணிப்பு மற்றும் திறமையான சொத்துப் பயன்பாட்டின் மூலம், நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களின் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதில் இந்திய ரயில்வே கவனம் செலுத்தியது.
முக்கியப் பொருட்களில், மீதமுள்ள இதரப் பொருட்கள் 16 சதவிகிதம் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. அதே நேரத்தில், இரும்புத் தாது ஏற்றுமதி 4.8 சதவிகிதமும், பன்றி இரும்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட எஃகு ஏற்றுமதி 3.5 சதவிகிதமும் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளன. உரங்களின் ஏற்றுமதியும் 6.2 சதவிகிதம் ஆரோக்கியமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது, பொருளாதாரத்தின் முக்கியத் துறைகளுக்கு ஆதரவளிப்பதில் ரயில்வேயின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.
ரயில் சரக்குப் போக்குவரத்தில் தொடர்ந்து மிகப்பெரிய பங்கைக் கொண்டிருக்கும் நிலக்கரியின் ஏற்றுமதி, கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட 1 சதவீதம் அதிகரித்து, சீரான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அனல் மின் நிலையங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யவும், இந்திய ரயில்வே நிலக்கரி போக்குவரத்திற்கு முன்னுரிமை அளித்ததுடன், அதன் போக்குவரத்தை வலையமைப்பு முழுவதும் உன்னிப்பாகக் கண்காணித்தது.
தடையற்ற சரக்குப் போக்குவரத்தை எளிதாக்கவும், பிராந்தியங்கள் முழுவதும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கவும், இந்திய ரயில்வே உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி-இறக்குமதி கொள்கலன் போக்குவரத்து இரண்டின் மீதான கண்காணிப்பையும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைகள், சவாலான சூழ்நிலைகளிலும் சரக்குப் போக்குவரத்து வளர்ச்சியைத் தக்கவைத்து, விநியோகச் சங்கிலித் திறனைப் பராமரிக்க உதவியுள்ளன.
பயணிகளைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சுமார் 59 கோடி பயணிகள் பயணித்த நிலையில், இந்திய ரயில்வே 2026 மே மாதத்தில் 61 கோடிக்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது. இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் புறநகர் அல்லாத ரயில் பிரிவு ஆகும். இதில் பயணிகளின் எண்ணிக்கை 7.4 சதவீதம் அதிகரித்து, 28 கோடியிலிருந்து 30 கோடியாக உயர்ந்துள்ளது. இது, நாடு முழுவதும் குறுகிய மற்றும் நீண்ட தூரப் பயணங்களுக்கு ரயில் பயணத்திற்கே தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படுவதைப் பிரதிபலிக்கிறது.
பருவகால பயணத் தேவை அதிகரிப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், இந்திய ரயில்வே பல்வேறு வழித்தடங்களில் அதிக எண்ணிக்கையிலான கோடைக்கால சிறப்பு ரயில்களை இயக்கியது. நவீன ரயில் சேவைகளின் தொடர்ச்சியான விரிவாக்கத்தின் மூலம் பயணிகளின் வசதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேசிய போக்குவரத்து நிறுவனம் தற்போது 164 வந்தே பாரத் சேவைகளை இயக்குகிறது. இதில், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹவுரா மற்றும் காமாக்யா இடையேயான படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் சேவையும் அடங்கும். அதே நேரத்தில், அம்ரித் பாரத் சேவைகளின் எண்ணிக்கை 68-ஐ எட்டியுள்ளது, மேலும் மே 2026-இல் மூன்று புதிய சேவைகள் தொடங்கப்பட உள்ளன.
சரக்கு ஏற்றுமதியில் தொடர்ச்சியான வளர்ச்சி, முக்கிய சரக்குப் பிரிவுகளில் வலுவான செயல்திறன் மற்றும் அதிகரித்து வரும் பயணிகள் ஆதரவு ஆகியவற்றின் மூலம், இந்திய ரயில்வேயானது நாட்டின் போக்குவரத்து வலையமைப்பின் முதுகெலும்பாகத் தனது பங்கைத் தொடர்ந்து வலுப்படுத்தி, பொருளாதார நடவடிக்கைகளுக்கு வழிவகுத்து, நாடு முழுவதும் மக்களை இணைக்கிறது.
எம்.பிரபாகரன்
