மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி, இன்று புது தில்லியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள 8,512 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள 3,748 கி.மீ தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களின் தரம் மற்றும் பராமரிப்புப் பணியின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், மத்திய இணை அமைச்சர் திரு ஹர்ஷ் மல்ஹோத்ரா, சாலை மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH), தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (NHIDCL) மற்றும் திட்ட ஒப்பந்ததாரர்களின் மூத்த அதிகாரிகளுடன் கலந்துகொண்டார்.
ஆய்வின் போது, சொத்துக்களின் ஆயுளை அதிகரிக்கவும், பயணத் தரத்தை மேம்படுத்தவும், தடையற்ற இணைப்பை உறுதி செய்யவும், களப்பணிகளைத் துரிதப்படுத்தவும், தரக் கண்காணிப்பு வழிமுறைகளை வலுப்படுத்தவும், நவீன கட்டுமான முறைகளைப் பின்பற்றவும் வேண்டியதன் அவசியத்தை திரு. கட்கரி வலியுறுத்தினார். மேலும், இணைப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் பயணிகளின் வசதியை ஊக்குவிக்கும் நீடித்த மற்றும் திறமையான நெடுஞ்சாலைகளை உருவாக்க, மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இடையூறுகளைக் குறைக்கவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், திறமையான வடிகால் மேலாண்மை, சரிவுப் பாதுகாப்புப் பணிகள் மற்றும் விரைவான பதிலளிப்பு அமைப்புகள் உள்ளிட்ட விரிவான பருவமழைத் தயார்நிலை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
RE சுவர்கள், பாதுகாப்புத் தணிக்கைகள், சாலை அடையாளங்கள், மரக்கன்றுகள் நடுதல் மற்றும் நில அழகுபடுத்துதல், முன்வார்ப்பு கட்டுமானம், அபாயப் பகுதி சீரமைப்பு, விரிவாக்க இணைப்புகள், திட்டத்தின் தர்க்கரீதியான முனைகள், பொருட்களின் இணக்கம் உள்ளிட்ட நெடுஞ்சாலைத் தரம் மற்றும் பராமரிப்பின் முக்கிய அம்சங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.
திருத்த நடவடிக்கைகளை உரிய நேரத்தில் செயல்படுத்துவதையும், பரிந்துரைக்கப்பட்ட தரத் தரநிலைகளைக் கடைப்பிடிப்பதையும் உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் திரு கட்கரி அறிவுறுத்தினார்.
திவாஹர்
