ராஜஸ்தானில் உள்ள இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லை மாவட்டங்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்கான உயர்நிலை ஆலோசனைக் கூட்டம், மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் பிகானேரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ராஜஸ்தான் முதலமைச்சர், பிகானேர், ஜெய்சால்மர், பார்மர், ஸ்ரீ கங்காநகர், பலோடி ஆகிய ஐந்து எல்லை மாவட்டங்களின் ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், சர்வதேச எல்லைகளில் பாதுகாப்புத் தரத்தை உறுதி செய்ய மத்திய அரசு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது என்பதை இந்தக் கூட்டம் வலியுறுத்தியது. எல்லைப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த, உள்ளூர் மக்கள், மாநில அரசு, பாதுகாப்பு முகமைகளை உள்ளடக்கிய முப்பரிமாண பாதுகாப்பு கட்டமைப்பு உருவாக்கப்படும் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
சர்வதேச எல்லையிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவிற்குள் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் சட்டவிரோத கட்டுமானங்களையும் உடனடியாக அகற்ற அமைச்சர் உத்தரவிட்டார். எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய நேரடி வரிகள் வாரியம், போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் ஆணையம் ஆகிய அமைப்புகள் மாநில அரசுடன் இணைந்து தீவிரவாத ஊடுருவல், போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத நிதி உதவி, எல்லை தாண்டிய குற்றங்களை ஒடுக்க கூட்டு உத்தியை வகுக்குமாறு அறிவுறுத்தினார்.
சைபர் குற்றங்களைத் தடுக்க ‘1930’ உதவி எண்ணை திறம்பட பயன்படுத்தவும், மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை முழுமையாக அமல்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், துடிப்பான கிராமங்கள் 2.0 திட்டம் மூலம் எல்லைக் கிராமங்களில் மத்திய அரசின் நலத்திட்டங்கள் 100 சதவீதம் சென்றடைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், உள்கட்டமைப்பு வசதிகள், எல்லைப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திவாஹர்
