மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) டிஜிட்டல் கட்டண அமைப்பைச் சீரமைப்பது தொடர்பாக, மத்திய கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் இன்று நான்கு முக்கிய பொதுத்துறை வங்கிகளின் (பாரத ஸ்டேட் வங்கி (SBI), பாங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி மற்றும் இந்தியன் வங்கி) மூத்த அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், குறிப்பாக மறுமதிப்பீடு, விடைத்தாள்களின் நகல்களைப் பெறுதல், பிற கட்டணம் சார்ந்த செயல்முறைகள் போன்ற தேர்வுக்குப் பிந்தைய சேவைகளுக்கு, ஒரு வலுவான, நம்பகமான, மாணவர்களுக்கு உகந்த கட்டணச் சூழல் அமைப்பை சீரமைக்கப்பட்டு வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார்.
கட்டணப் பரிவர்த்தனைகள் உரிய நேரத்தில் நடைபெறுவதையும், கட்டணம் தொடர்பான சிக்கல்களுக்கு உடனடித் தீர்வு கிடைப்பதையும், கூடுதல் தொகையாகச் செலுத்தப்பட்ட அல்லது ஆன்லைன் கட்டண பரிவர்த்தனைகள் நடைபெறாத தருணத்தில் பரிவர்த்தனைகளுக்கான பணம் தானாகவே திரும்பப் பெறுவதையும் உறுதிசெய்யும் வகையில், வலுவான கட்டண நெறிமுறைகளை அமைப்பதில், சிபிஎஸ்இ-க்கு உதவுமாறு அவர் வங்கி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேம்பட்ட தொழில்நுட்பப் பாதுகாப்பு அம்சங்கள், நிகழ்நேரக் கண்காணிப்பு, விரைவான குறைதீர்க்கும் வழிமுறைகள் ஆகியவற்றின் மூலம், கட்டண பரிவர்த்தனைக்கான கட்டமைப்பை வலுப்படுத்த, சிபிஎஸ்இ-யுடன் இணைந்து பணியாற்றுமாறு வங்கிகள் கேட்டுக்கொள்ளப்பட்டன.
எதிர்காலத்தில் மாணவர்கள் தொழில்நுட்பக் கோளாறுகளையோ அல்லது கட்டணப் பரிவர்த்தனை தோல்விகளையோ எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில், இந்த நடவடிக்கைகளுக்கு உயர் முன்னுரிமை அளிக்குமாறு அவர் மூத்த அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். தடையற்ற, பாதுகாப்பான, செயல்திறன் மிக்க டிஜிட்டல் பரிவர்த்தனைகளை உறுதிசெய்யுமாறு திரு. பிரதான் வங்கிகளைக் கேட்டுக்கொண்டார்.
எஸ்.சதிஸ் சர்மா
