சுரங்கப்பாதை பொறியியல், சரிவு நிலைத்தன்மை, திறன் மேம்பாடு ஆகியவற்றில் மேம்பட்ட ஆலோசனை ஆதரவுக்காக, நார்வே புவி தொழில்நுட்ப நிறுவனத்துடன் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பின் மேம்பாட்டிற்கான தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன்,  நார்வேயின் புவித்தொழில்நுட்ப நிறுவனத்துடன் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், அண்மையில் ஓஸ்லோவில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. புவித்தொழில்நுட்பப் பொறியியல், இயற்கைப் பேரிடர் தணிப்பு ஆகியவற்றில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நார்வே புவித்தொழில்நுட்ப நிறுவனத்தின்  நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளை உலகத் தரத்திற்கு மேம்படுத்தவும் பராமரிக்கவும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்த ஒப்பந்தம் பிரதிபலிக்கிறது. குறிப்பாக, புவியியல் ரீதியாக சவாலான நிலப்பரப்புகளில் பொறியியல் திறன்களை வளர்ப்பதற்கு முக்கிய படியாக இது அமைகிறது.

 நிறுவனத் திறன் மேம்பாடு, அறிவுப் பரிமாற்றத்திற்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் முக்கியத்துவம் அளிக்கிறது. இயற்கை இடர்களைக் குறைப்பது தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளில் இரு அமைப்புகளும் இணைந்து செயல்படும். கூட்டுப் பயிலரங்குகள், கருத்தரங்குகள், தொழில்நுட்பப் பயிற்சித் திட்டங்கள், சிறப்புத் தொழில்நுட்ப நூல்கள் வெளியீடு ஆகியவற்றின் மூலம் நெடுஞ்சாலைத் துறையின் தொழில்நுட்பத் திறன்கள் மேம்படுத்தப்படும்.

அடையாளம் காணப்பட்ட துறைகளில் இரு அமைப்புகளும் இணைந்து செயல்பட முயற்சி செய்யும் அதே வேளையில், இந்த ஏற்பாடு ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒரு திட்டம் என்ற அடிப்படையில் அமையும். இதன்மூலம், தேவைக்கேற்ப ஒவ்வொரு தரப்பினரும் மற்ற அமைப்புகளுடன் சுதந்திரமாக இணைந்து செயல்படும் நெகிழ்வுத்தன்மை அனுமதிக்கப்படுகிறது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐந்து ஆண்டுகளுக்கு செல்லத் தக்கதாகும்.

Leave a Reply