இயற்கை வைரம் தொடர்பாக நுகர்வோரின் நம்பிக்கையை வலுப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார். இயற்கை வைரத்துறையின் எதிர்காலம் குறித்த நான்கு நாள் கலந்துரையாடல் கிம்பர்லி செயல்முறைக் கூட்டமைப்பில் உள்ள பிரதிநிதிகள் இடையே மும்பையில் நடைபெற்றது. கிம்பர்லி செயல்முறை என்பது சட்டவிரோத வைர வர்த்தகத்தைத் தடுக்க நாடுகள், தொழில்துறையினர் ஆகியோர் இணைந்து செயல்படும் ஒரு சர்வதேச அமைப்பாகும். இந்தியாவின் தலைமையில் நடைபெற்ற இந்த அமைப்பின் இடைக்காலக் கூட்டம் மும்பையில் நேற்று (14.05.2026) நிறைவடைந்தது.
நிறைவு அமர்வில் பேசிய மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், வைரங்களை வெட்டுவதற்கும், மெருகூட்டுவதற்கும் இந்தியா உலகின் முன்னணி மையமாகத் திகழ்கிறது என்றார். வைரத் தொழில்துறையின் நம்பிக்கையையும் பொறுப்புணர்வையும் அதிகரிப்பதில் கிம்பர்லி செயல்முறை முக்கியப் பங்காற்றுவதாக அவர் குறிப்பிட்டார்.
வைரத் தொழில்துறை நம்பகத்தன்மை, இணக்கம், நுகர்வோர் நம்பிக்கை ஆகிய 3 முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார். இதில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். இந்த இடைக்காலக் கூட்டத்தில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் கருத்துகள், புதுதில்லியில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள முழு அமர்வில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்படும்.
திவாஹர்
