நவீன நடுத்தர போர்விமானத்தின் மைய ஒருங்கிணைப்பு, விமானப் பரிசோதனை மையம் மற்றும் கடற்படை தளவாட உற்பத்தி நிறுவனத்திற்கு பாதுகாப்பு அமைச்சரும் ஆந்திரப் பிரதேச முதலமைச்சரும் அடிக்கல் நாட்டினர்.

ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள புட்டபர்த்தியில், பல்வேறு உத்திசார் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் திட்டங்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மற்றும் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு என் சந்திரபாபு நாயுடு ஆகியோர் 2026 ,மே 15 அன்று அடிக்கல் நாட்டினர். ஐந்தாம் தலைமுறை நவீன நடுத்தரப் போர் விமானம் மற்றும் பிற எதிர்கால உள்நாட்டுத் தளங்களின் மேம்பாட்டை விரைவுபடுத்துவதற்காக புட்டபர்த்தியில் மைய ஒருங்கிணைப்பு மற்றும் விமானப் பரிசோதனை மையத்திற்கும், நீருக்கடியில் இயங்கும் நவீன ஆயுதங்கள் மற்றும் கடற்படை அமைப்புகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள டி சிரசபள்ளி கிராமத்தில் கடற்படை தளவாடங்கள் உற்பத்தி நிறுவனத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், இந்தத் திட்டங்களின் தொடக்கம் உண்மையிலேயே வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று குறிப்பிட்டார். தற்போதைய உலகளவில் நிலவும் கடினமான சூழலில் தேசிய நலன்களைப் பாதுகாக்க, பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் தற்சார்பு என்பது ஒரு மிக முக்கியமான தேவை என்பதை அவர் வலியுறுத்தினார். தேசத்தின் பாதுகாப்பு விஷயங்களில், பிற நாடுகளை நிரந்தரமாகச் சார்ந்திருப்பதை விட, தற்சார்பை அடைவதே நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இந்தத் திட்டங்கள் பாதுகாப்புப் படைகளின் அனைத்துப் பிரிவுகளுக்கும் பயனளிக்கும். இந்தப் பன்முகப்படுத்தல் தற்செயலானது அல்ல. எங்களின் நோக்கம் மிகத் தெளிவானது. பாதுகாப்புத் துறையில் தற்சார்பு அடைவது, முப்படைகளும் எதிர்காலத்திற்குத் தயாராக இருப்பதை உறுதி செய்வது என்ற உறுதியான இலக்குடன் நாம் முன்னேறி வருகிறோம். இந்தத் திட்டங்கள், தேசத்தின் தற்சார்பு நோக்கிய பயணத்திலும், ஆந்திரப் பிரதேசத்தின் வளர்ச்சிப் பயணத்திலும் மைல்கல்லாக அமையும்,” என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார்.

நவீன நடுத்தர போர்விமானத் திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீடு சுமார் ரூ. 15,000 கோடி ஆகும். மேலும், டிஆர்டிஓ -வின் துணை அமைப்பான வானூர்தியியல் மேம்பாட்டு முகமையின் மைய ஒருங்கிணைப்பு மற்றும் விமானப் பரிசோதனை மையம் இத்திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். இந்த மையம் ஏறத்தாழ ரூ. 2,000 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. “ஐந்தாம் தலைமுறை விமானம் வானில் பறக்கவிருக்கும் உலகளாவிய இடங்களின் தனித்த வரிசையில் புட்டபர்த்தி இணைய உள்ளது. கண் இமைக்கும் நேரத்தில் எதிரியை அழிக்கும் திறன் கொண்ட ஒரு விமானத்தின் பிறப்பிடமாக இது மாறும்,” என்று திரு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

வரவிருக்கும் ட்ரோன் நகரம் குறித்துப் பேசிய திரு ராஜ்நாத் சிங், இளம் தொழில்முனைவோரின் கூட்டான கண்ணோட்டத்தை பாராட்டினார். இந்த அலகுகள் தனித்தனியாக அளவில் சிறியவையாக இருந்தாலும், ‘மேக்-இன்-இந்தியா’ தொலைநோக்குப் பார்வையை எதார்த்தமாக மாற்றும் முக்கிய அங்கங்கள் என்று அவர் கூறினார். “இங்கு உற்பத்தி செய்யப்படும் ட்ரோன்கள், இந்தியாவின் சிறப்பை உலகெங்கும் பறைசாற்றும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். சூரத் ‘வைர நகரம்’ என்றும், பெங்களூரு இந்தியாவின் ‘சிலிக்கான் பள்ளத்தாக்கு’ என்றும் அறியப்படுவதைப் போலவே, இப்பகுதியும் விரைவில் நாட்டின் ‘ட்ரோன் மையமாக’ அங்கீகரிக்கப்படும்,” என்று அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு என் சந்திரபாபு நாயுடு, உள்நாட்டுமயமாக்கல், தற்சார்பு ஆகியவற்றில் தொடர்ச்சியான கவனம் செலுத்தி, இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதற்கும் ராணுவத்தை நவீனமாக்குவதற்கும் பிரதமர் திரு மோடியும் பாதுகாப்பு அமைச்சரும் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டினார். சீர்திருத்தங்கள், முதலீடு மற்றும் புத்தாக்கங்களுக்குத் தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்பட்டதன் காரணமாக, பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைகளில் நாட்டின் தயார்நிலையும் உலகளாவிய அந்தஸ்தும் மேம்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில், சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு கிஞ்சரப்பு ராம்மோகன் நாயுடு, ஆந்திரப் பிரதேச அமைச்சர்கள், பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறை செயலாளர் திரு சஞ்சீவ் குமார், பாதுகாப்பு அமைச்சகத்தின் பிற மூத்த அதிகாரிகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Leave a Reply